ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ் சினிமாவில் ஆல்டைம் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ஜெயலலிதாவின் திரைப்பயணம் ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் ஆல்டைம் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ஜெயலலிதாவின் திரைப்பயணம் ஒரு பார்வை

ஜெயலலிதா

ஜெயலலிதா

தமிழ் சினிமாவின் ஆல்டைம் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ஜெயலலிதா என்னும் ஆளுமை, சோதனைகளை சாதனைகளாக்கி சினிமாவில் கோலோச்சியதைத் திரும்பிப் பார்ப்போம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஜெயலலிதா' என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. ஜெயராம், வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூரில் பிறந்த ஜெயலலிதா தனது இரண்டு வயதிலேயே தந்தையை இழந்தார். பெங்களூரில் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், அவர் சில ஆண்டுகள் 'பிஷப் காட்டன் பள்ளியில்' கல்வி பயின்றார். வெள்ளித் திரையில் அவரது தாயாருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், சென்னை வந்தார்.

  சென்னையிலுள்ள 'சர்ச் பார்க் கான்வென்ட்டில்' தனது பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார் ஜெயலலிதா. சட்டம் படிக்க விரும்பிய ஜெயலலிதா, குடும்பச் சூழல் காரணமாக 15 வயதில் சினிமாவில் நடிக்க வந்தார். இயக்குநர் ஷங்கர் வி.கிரி இயக்கிய "எபிஸில்" என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

  ஜெயலலிதாவின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான "சின்னடா கொம்பே" என்ற கன்னட படமாகும். ஒரு வருடம் கழித்து, அவர் "வெண்ணிற ஆடை" என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். துடிப்பு மற்றும் துள்ளலான நடிப்பு பாணி மூலம் ரசிகர்கள் மனங்களை வென்றார். அடுத்தடுத்து அவர் நடித்த தமிழ்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கொடி நாட்டின. எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், காவல்காரன், குடியிருந்த கோயில், ரகசிய போலீஸ், நம் நாடு என இந்த கூட்டணியின் நடிப்பில் வந்த படங்கள் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.

  திரையுலகின் பிற்பகுதியில் அவர் சிவாஜிகணேசன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெற்றிப்படங்களை கொடுத்தார். ஜெயலலிதாவின் 100-வது படமான திருமாங்கல்யம் 1977ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக 1980ல் வெளியான 'நதியைத்தேடி வந்த கடல்' என்ற படம் அவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை தந்தது.

  5 முறை தமிழ்நாடு ஸ்டேட் ஃபிலிம் விருதுகள், பட்டிக்காடா பட்டனமா, சூர்யகாந்தி ஆகிய படங்களுக்காக அடுத்தடுத்த வருடங்களில் ஃபிலிம் ஃபேர் விருதுகள் என தனது நடிப்புக்கும் சரியான அங்கீகாரம் பெற்றார் ஜெயலலிதா.

  1970களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக ஜெயலலிதா தொடர்ந்து நீடித்து வந்தார். தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த ஜெயலலிதா அப்போது மட்டுமல்ல, அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமாவின் ஆல்டைம் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது மிகையில்லை.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Jayalalithaa