முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடைகேட்டு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 90 சதவிகிதம் விசாரணை முடிந்துள்ள நிலையில், அப்போலோ நிர்வாகம் தற்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆணையம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்த பின்னர் அதில் அப்போலோ நிர்வாகத்திற்கு எதிர்ப்பு இருந்தால் அதனை முறையிடுவதற்கு வாய்ப்பிருக்கும் போது இப்போதே எதிர்ப்பது ஏன் எனவும் வினவினர். மருத்துவமனையின் பெயருக்கு களங்கம் ஏற்பட்ட பிறகு முறையிடுவதில் அர்த்தம் இல்லை என்பதால் தற்போதே எதிர்ப்பதாக அப்போலோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணை விபரங்கள் ஏற்கனவே கசிந்துள்ளதாகவும் கூறிய அப்போலோ நிர்வாகம், முதலமைச்சருக்கு பிரைவசி வேண்டும் அதனால் சிசிடிவி கேமராக்களை அகற்றுங்கள் என அரசு உத்தரவிட்டதால்தான், கேமராக்கள் அகற்றப்பட்டதாகவும் விளக்கமளித்தது.
பல அரசியல் பிரமுகர்கள் இன்னும் விசாரிக்கப்படாத நிலையில், அப்பல்லோ மருத்துவர்களை மட்டும் விசாரணைக்கு அழைத்தது ஏன் எனவும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாததால்தான், மருத்துவர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய வேறு குழு முன்பாக ஆஜராக தயாராக உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆணையம் என்பது உண்மை கண்டறியும் குழு தானே, அவர்களால் தீர்ப்பு வழங்க முடியாதே என்று நீதிபதிகள் கூறியதற்கு, மருத்துவ ரீதியிலான எந்த முடிவையும் ஆறுமுகசாமி ஆணையத்தால் எட்ட முடியாது என அப்போலோ நிர்வாகம் பதிலளித்தது. இதனைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.