பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட திமுக தலைவர்கள் சிறை செல்வார்கள் : அமைச்சர் ஜெயக்குமார்..!

பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட திமுக தலைவர்கள் சிறை செல்வார்கள் : அமைச்சர் ஜெயக்குமார்..!
ஜெயக்குமார்
  • News18
  • Last Updated: February 18, 2020, 11:34 AM IST
  • Share this:
2006-2011 பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட திமுக தலைவர்கள் சிறை செல்வார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன் பெஞ்சமின், கடம்பூர் ராஜு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், சிங்காரவேலர் அவருக்கென்று ஒரு குறிக்கோள் வைத்து, அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவளிக்காமல் செயல்பட்டவர் எனவும், சட்டம் பயின்று வழக்கறிஞராக இருந்த அவர், தீண்டாமையை எதிர்த்து போராட தனது உத்யோகத்தையும் துறந்துள்ளார் எனவும் புகழாரம் சூட்டினார். மேலும், இந்தியாவில் முதன் முதலாக மே தினத்தை கொண்டாடிய மாபெரும் புரட்சியாளர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பன்முக சிந்தனையாளரான அவரது புகழை பரப்பும் பொருட்டே அவர் பெயரில் விருது வழங்கவும் அவருக்கென்று மணி மண்டபம் அமைக்கவும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, அதனை தொடங்கியும் வைத்ததாக தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தில் 2006-2011 ஆம் ஆண்டு வரை மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் உதவி பல் மருத்துவர் ஆகிய பதவிகளுக்கான பணியமர்த்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் இதில் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, அந்தியூர் செல்வராஜ் மற்றும் மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.


அதுமட்டுமல்லாமல், இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் இந்த வழக்கு அடுத்த மாதம் 19-ஆம் தேதி விசாரணைக்கு வரும்போதும் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.


மேலும், பல ஊழல்களை செய்து ஊழல் கட்சியாக விளங்கும் தி.மு.க தற்போது சிறப்பாக செயல்பட்டு முறைகேடு செய்த 40 க்கும் மேற்பட்டோரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி விசாரணையை குறைகூறுவதோடு டி.என்.பி.எஸ்.சி மற்றும் அ.தி.மு.க அரசு மீது குற்றம்சாட்டி வருவது வேடிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.


மேலும், விரைவில் ஊழலின் ஊற்றாக விளங்கும் திமுக தனது ஆட்சி காலத்தில் டி.என்.பி.எஸ்.சி மூலம் 2006-2011 ஆம் ஆண்டு வரை செய்த முறைகேடுகளுக்காக உள்ளே செல்லும் நிலை வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


அதுமட்டுமல்லாமல், தமிழக அ.தி.மு.க அரசுக்கு தவறு செய்பவர்களை தண்டிப்பதில் எந்தவொரு பாரபட்சமும் இல்லை எனவும் இந்த வழக்கில் அரசு வெளிப்படைத்தன்மையுடனேயே விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.


Also see...First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்