அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தினசரி பரபரப்பு காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர் செல்வம் அவரது சொந்த மாவட்டமான தேனிக்கு சென்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்தகைய பரபரப்பான சூழலில் அ.தி.மு.க சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி இன்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது அவர், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகிவிட்ட நிலையில் கழகத்தின் சட்டதிட்ட விதிகளில் இடம் இருக்கும் நிலையில் கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
74 தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ள நிலையில் 65 தலைமைக் கழக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். 4 பேர் கூட்டத்துக்கு வர முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளனர். பன்ரூட்டி ராமச் சந்திரன் உடல்நிலை சரியில்லை என்று கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார். 5 தலைமைக் கழக நிர்வாகிகள் மட்டுமே ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழ் தபால் மூலம் அனுப்பவது குறித்து முடிவு செய்யப்பட்டது. மேலும் நிறைய விவகாரங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதெல்லாம் மிகவும் ரகசியமானது. இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்புகளாக வரலாமா கூடாதா என்று கட்சிதான் முடிவு செய்யும்.
பிரிவு 20 ஆ7 ஒருங்கிணைப்பாளர் இல்லாத சூழலில் கட்சியை வழிநடத்த தலைமைக் கழக நிர்வாகிகள் அதிகாரம் பெற்றவர்கள். தலைமைக் கழக செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அறிந்தும் அறியாமல் ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறாரா என்று தெரியவில்லை. தி.மு.கவின் விமர்சனம் சாத்தான் வேதம் ஒதுவதுபோல உள்ளது. காவிரி நீர், கச்சத் தீவு, முல்லைப் பெரியாறு, முள்ளிவாய்க்கால் படுகொலை என தொடர்ந்து தி.மு.க துரோகம் செய்தது.
ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்- அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா
கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் பேனரை மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கை நடைபெறுகிறது. துரோகத்தின் அடையாளமாக ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார். ஆரம்ப காலத்திலிருந்து அ.தி.மு.கவிற்கு துரோகம் செய்துள்ளார். துரோகம் என்பது ஓ.பன்னீர் செல்வத்தின் உடன் பிறந்த ஒன்று. ஜூலை 11-ம் தேதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். மு.க.ஸ்டாலினை ஓ.பி.ரவீந்திரநாத் சந்தித்தை அ.தி.மு.க தொண்டன் ஏற்றுக் கொள்ள மாட்டான். பொருளாளர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் நீடிப்பாரா என்பது குறித்து பொதுக்குழு முடிவு எடுக்கும்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.