Home /News /tamil-nadu /

அருணகிரி நாதர் மதநல்லிணக்கத்தைக் காத்தவர் - ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி இரங்கல்

அருணகிரி நாதர் மதநல்லிணக்கத்தைக் காத்தவர் - ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி இரங்கல்

மதுரை ஆதினம் அருணகிரிநாதர்

மதுரை ஆதினம் அருணகிரிநாதர்

மதுரை ஆதினமாக இருந்த அருணகிரிநாதர் மதநல்லிணக்கதைக் காத்தவர் என்று முன்னாள் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி ஆகியோர் தெரிவித்துள்ளார்.

  மதுரை ஆதினமாக இருந்த அருணிகிரி நாதர் உடல்நலக் குறைபாட்டின் காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருடைய மறைவு தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், ‘மதுரை ஆதினம் என்று அன்போடு அழைக்கப்பட்ட அருணகிரிநாதர் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையடைகிறோம். சிறந்த ஆன்மீக வாதியாக திகழ்ந்த அவர், அரசியல் அரங்கிலும் கவனம் பெற்றவராய் வலம் வந்தார்.

  அவரது தமிழ் மொழி மீதான பற்றும், தமிழினத்தின் மீதான அக்கறையும் அவரை ஆன்மீகத்தையும் கடந்து அனைவரையும் நேசிக்க வைத்தது. அவரது தமிழும், ஆங்கிலமும் கலகலப்பான மொழி நடையாக அனைவரையும் வசீகரிக்கும். மத நல்லிணக்கத்தை வளர்ப்பதிலும், பிற மதத்தினரை கொண்டாடுவதிலும் சமகாலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

  அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், ஷஹீத் பழனிபாபா, நாகூர் அனிபா ஆகியோரோடு அவர் கடைப்பிடித்த தோழமை கற்கண்டுக்கு இணையானது. தங்கள் ஆதினத்திற்கு முகலாய மன்னர் ஒளரங்கசீப், நிலங்களை தானமாக தந்ததை பெருமையோடு பரப்புரை செய்து, மத நல்லிணக்கம் வளர அரும்பாடுபட்டவர்.

  இந்து மதத்தின் சிறப்புகளை சிலாகிக்கும் அவர், திருக்குர் ஆனின் முதல் அத்தியாயமான அல்- பாத்திஹா வை மனனம் செய்து, பல மீலாது மேடைகளில் மகிழ்ச்சிப் பொங்க எடுத்துக் கூறுவார். அவர் மத நல்லிணக்கம் காத்த பெருந்தகையாளர். அன்னாரைப் போன்ற ஆன்மீக தலைவர்கள் தீவிரமாக இயங்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் அவரை நாம் இழந்திருக்கிறோம். அவரை இழந்து வாடும் பக்தர்கள், ஆதின மடத்தினர், அபிமானிகள் என அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது. அன்னாரின் தமிழ் பணிகளையும், சமய நல்லிணக்க சிந்தனைகளையும் வளர்த்தெடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  மனித நேய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், ‘தமிழகத்தில் தொன்மையான புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் சுவாமிகள் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது.
  தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க தனது இறுதி மூச்சுவரை களமாடியவர். பல இஸ்லாமிய மேடைகளில் சரளமாக திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக் காட்டி அதற்கு விளக்கமும் அளிக்கும் திறன் கொண்டவர்.

  இஸ்லாமிய சமயப் பெரியவர்கள் பலருடனும் நெருங்கிய தோழமை பாராட்டியவர். இசைமுரசு நாகூர் அனிபாவின் குடும்ப நண்பராக திகழ்ந்தவர். நாகூர் அனிபாவின் பாடல்களை பல மேடைகளில் பாடி மகிழ்ந்தவர். என்னுடனும் கடந்த பல ஆண்டுகளாக நட்புடன் இருந்து அவ்வப்போது உரையாடுவார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மடத்திற்கு சென்ற போது அவர் என் மீது பொழிந்த பாசமலை இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழ் பக்தி இலக்கியங்களை பரப்புவதில் பெருந்தொண்டு ஆற்றியவர். ஆன்மீகவாதிகளில் துணிச்சலாக அரசியல் பணியும் செய்தவர். உலக மதங்கள் குறித்தான தெளிவான பார்வை உடையவர். அவரின் இறப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை ஆதீன மடம் அவர் விட்டுச்சென்ற சமூக நல்லிணக்க பணிகளை தொடர்ந்து செய்வதே அருணகிரிநாதருக்கு செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Madurai

  அடுத்த செய்தி