இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த 13-ம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் காட்சிப்படுத்துவதாக புகார் எழுந்தது. இதனால் இந்த திரைப்படத்திற்கு குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. இந்தியாவிலும் இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த அரும்பாடுபட்டு வரும் தங்களின் உழைப்பை மனம் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம். வலதுசாரிகள் வடமாநிலங்களில் வளர்த்து வைத்துள்ள மதவாத மனப்பான்மையை தமிழகத்தில் அணுவளவும் நுழையவிடாமல் ஆற்றலோடு தங்களின் அரசு ஆற்றிவரும் பணிகளால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது.
அதேநேரம், அதை குழைப்பதற்காகவும், தங்களின் அரசியல் பிழைப்பிற்காகவும் மதவாத பாசிஸ்டுகள், அரசுக்கு பல்வேறு இடையூறுகளையும் சமூகத்தில் பல குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். திரையுலகையும் இந்த தீயோரின் களமாக மாற்றும் முயற்சிகள் நெடுங்காலமாகவே நடந்து வருகின்றன. விஸ்வரூபம், துப்பாக்கி உள்ளிட்ட பல திரைப்படங்கள் முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டு பெரும் குழப்பங்களுக்கு வித்திட்டன.
Also Read : கறிசோறு கொஞ்சம் காரம் - நரிக்குறவர் மாணவி வீட்டில் உணவு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்
முஸ்லிம் சமுதாயமே பயங்கரவாத சமுதாயமாக மேற்கண்ட படங்களில் கட்டப்பட்டன. இடைக்காலத்தில் சிறிது நின்றிருந்த இந்த இழி செயலுக்கு தற்போது “பீஸ்ட்” என்ற படத்தின் மூலம் புத்துயிர் ஊட்டப்பட்டு உள்ளது. குவைத் மற்றும் கத்தார் நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப் படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.