ஃபரூக் அப்துல்லாஹ் ஏன் இன்னும் நாடாளுமன்றத்திற்கு வர இயலவில்லை என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய திருமாவளவன், ஒரு மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாக கூறுப்போட்டு சிதைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது, அரசியல் நேர்மைக்கும் எதிரானது என்றார்.
மேலும் பேசிய அவர், ”அரசின் இந்த நடவடிக்கையை ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைச் சார்ந்த மக்கள் எந்த அளவுக்கு அதை ஏற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கிறபோது, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று நான் இந்த அவையில் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
மேலும், ஃபரூக் அப்துல்லாஹ் உள்ளிட்ட முன்னாள் முதலமைச்சர்களை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது ஜனநாயகப் படுகொலை. அவர்களை விடுவித்ததாக நாம் அறியவருகிறோம். ஆனால், உண்மையில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்க முடியும். மூத்த உறுப்பினர், முதுபெரும் தலைவர் ஃபரூக் அப்துல்லாஹ் அவர்கள் ஏன் இன்னும் நாடாளுமன்றத்திற்கு வர இயலவில்லை என்கிற கேள்வி எழுகிறது.
மூன்று யூனியன் பிரதேசங்களை மேம்படுத்துவதற்காக, அவற்றின் வளர்ச்சிக்காக இந்த அரசு கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கிறது என்று இங்கே பலரும் பாராட்டிப் பேசினார்கள். ஆனால், சுயேட்சையாக, சுதந்திரமாக அந்த மாநில அரசு இயங்கிக்கொண்டிருந்த போக்கு தடுக்கப்பட்டிருக்கிறது; உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. இந்திய அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மிகமோசமான வரலாற்றுக் கறை என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களையும் மீண்டும் மாநிலமாக ஒருங்கிணைக்க வேண்டும்; மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.