• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ட்ரெண்டிங்கில் ஆங்கிலேயரை ஆட்டம் காணவைத்த “ஜம்புத்தீவு பிரகடனம்”: சுதந்திர போராட்ட வரலாற்றின் மைல்கல் இன்று!

ட்ரெண்டிங்கில் ஆங்கிலேயரை ஆட்டம் காணவைத்த “ஜம்புத்தீவு பிரகடனம்”: சுதந்திர போராட்ட வரலாற்றின் மைல்கல் இன்று!

1801_ஜம்புத்தீவு பிரகடனம்

1801_ஜம்புத்தீவு பிரகடனம்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டிலேயே முதல் முறையாக போர் பிரகடனம் வெளியிட்டு 220 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும் இன்றைய கால இளைஞர்களும் இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூர்த்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

  • Share this:
220 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்துக்கு அடித்தளமிட்ட நாள்.

1847ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்திற்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே மருது சகோதர்களால் தென்னகத்தில் வெளியிடப்பட்ட ஜம்புத்தீவு பிரகடனம், ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்தது என்றே வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தென் தமிழகத்தின் சிவகங்கை சீமையை ஆண்ட மன்னர்களான மருது சகோதரர்களில் இளையவரான சின்ன மருது, 1801ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார். இதன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னுதாரனமாக திகழ்ந்தனர் மருது சகோதரர்கள்.

ஜம்புத்தீவு பிரகடனம்


ஆங்கிலேயர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் எனவும், அனைத்து தரப்பு மக்களும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுபட ஒன்று கூட வேண்டும் என வலியுறுத்தி பல வீர தீர கருத்துக்களுடன் அடங்கிய அறிக்கைகளை திருச்சி மலைக் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் சுவர் போன்ற இடங்களில் ஒட்டினார் சின்ன மருது . இந்த அறிக்கையே ஜம்புத் தீவு பிரகடனம் என அழைக்கப்படுகிறது.



ஜம்பு அல்லது நாவல் தீவு என இந்தியப் பெருங்கண்டம் அழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே போர் பிரகடனம் ஜம்புத் தீவு பிரகடனம் என அழைக்கப்படுகிறது. மருது சகோதரர்களின் இந்த போர் பிரகடனம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் எதிர்ப்பாக இருந்ததால் மருது சகோதரர்களை அழித்தொழிக்க வேண்டுமென முடிவெடுத்த ஆங்கிலேயர்கள், தங்களுக்கு  எதிராக கிளர்ச்சி செய்த பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி மருது சகோதரர்களின் மீது போர் தொடுத்தனர். சுமார் 150 நாட்களுக்கும் மேலாக நீடித்த போரின் போது, மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் அவர்களால் கட்டப்பட்ட காளையார் கோவிலை இடித்துவிடுவதாக ஆங்கிலேயர்கள் அறிவித்து பீரங்கியை நிறுத்தினர்.



கோவிலை காப்பதற்காக உயிரையும் துச்சமென நினைத்து ஆங்கிலேயர்களிடம் மருதுசகோதர்கள் சரண் அடைந்தனர். பின்னர் அக்டோபர் -24  1801ம் ஆண்டு மருது சகோதர்கள், அவர்களின் வாரிசுகள், குடும்பத்தினர் என சுமார் 500 பேரை திருப்பத்தூர் கோட்டை முன்பு ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். துரைச்சாமி என்ற ஒரே ஒரு வாரிசையும், ஒரு சிலரையும் மலேசியாவின் பினாங்கு தீவுக்கு ஆங்கிலேயர்கள் நாடு கடத்தினர்.



ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென் தமிழகத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்திய மருது சகோதர்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாட்டிலேயே முதல் முறையாக போர் பிரகடனம் வெளியிட்டு 220 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும் இன்றைய கால இளைஞர்களும் இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூர்த்து ட்விட்டரில் பதிவிட்டு வருவதால் #1801_ஜம்புத்தீவு பிரகடனம் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: