• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காலண்டர் காட்சி... இயக்குனர் விளக்கம்

ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காலண்டர் காட்சி... இயக்குனர் விளக்கம்

சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், 'போஸ்ட் புரடெக்ஷன் பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. : ஞானவேல்

  • Share this:
    ஜெய்பீம் படம் மிகப்பெரும் அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதற்கு படத்தில் ஒரு காட்சியில் வரும் காலண்டர் முக்கிய காரணமாக அமைந்தது. அந்தக் காட்சியில் 6-4-1995 என்ற நாள் குறிக்கப்பட்டிருக்கும். காலண்டரில் அக்னி கலச படம் இடம்பெற்றிருக்கும். இந்தக் காட்சிதான் காட்டுத்தீயாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தங்கள் சமூக மக்களை புண்படுத்துவதாக உள்ளதெனக் கூறி, வன்னிய சங்கங்களும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் மற்றும் பாமகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன்பின்னர், அக்னி கலசம் படம் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக சரஸ்வதி படம் இடம்பெற்ற காலண்டர் காட்சியில் இடம் பெற்றது.

    தற்போது இந்த காட்சி எப்படி இடம்பெற்றது என்பது குறித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.

    பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.

    சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், 'போஸ்ட் புரடெக்ஷன் பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே. பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட , படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.

    நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

    யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: