• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெய்பீம் சர்ச்சை: ஒரு சாதியை குறிவைப்பது கருத்து சுதந்திரமா? - சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

ஜெய்பீம் சர்ச்சை: ஒரு சாதியை குறிவைப்பது கருத்து சுதந்திரமா? - சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

JaiBhim Surya

JaiBhim Surya

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பது நல்ல எண்ணம். ஆனால் மற்ற சாதி பற்றி பொய் சொல்வது தவறு

  • Share this:
மற்ற சாதி பற்றி பொய் சொல்வது தவறு, ஒரு சாதியை குறிவைப்பது கருத்து சுதந்திரமா என ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு சரமாரியாக கேள்விகளை முன்வைத்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.

நடிகர் சூர்யா நடிப்பில் அவருடைய 2டி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 2ம் தேதியன்று வெளியானது. ஞானவேல் இயக்கிய இப்படத்தில் மணிகண்டன், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். 1995ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கியிருப்பதாக சொல்லப்படும் இப்படத்தில் குறிப்பிட்ட சாதியினரை இழிவுபடுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சர்ச்சை வெடித்தது. கண்டன குரல்கள் வலுத்த நிலையில், குறிப்பிட்ட காட்சி படத்தில் மாற்றப்பட்டது.

அன்புமணியின் 9 கேள்விகள்:

இது குறித்து படத்தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகளை முன்வைத்து கடிதம் ஒன்றை எழுதினார். ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து நடித்துள்ள நீங்களும், உங்கள் குழுவினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவதை விட, வன்னியர்களை இழிவுபடுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். இதுதான் ஜெய்பீம் என்பதற்கு நீங்கள் அறிந்து கொண்ட பொருளா? எனவும் படைப்பாளிகளில் இருவகை உண்டு. ஒரு தரப்பினர் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இரண்டாவது தரப்பினர் திரைப்படத்தில் ஏதேனும் சர்ச்சையை (Controversy) எழுப்பி, அதைப் பேசு பொருளாக்கி, அந்த விளம்பரத்தில் திரைப்படத்தை ஓட வைக்க முயல்பவர்கள். இவற்றில் எந்த வகையில் உங்களைச் சேர்ப்பது? என அவர் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

Also read:   பெண்ணை நிர்வாணப்படுத்தி போலீஸ் நிலையத்தில் நடனம் ஆட வைத்த பெண் காவல் ஆய்வாளர்..

சூர்யா பதில்:

அன்புமணியின் கேள்விகளுக்கு பதிலளித்த சூர்யா, விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய தேவை எனக்கில்லை படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட ‘பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம் என்று சூர்யா பதிலளித்தார்.

காயத்ரி ரகுராம் சூர்யாவுக்கு பதிலடி:

ஜெய்பீம் பட விவகாரத்தில் தற்போது சூர்யாவுக்கு நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “’மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது' - அன்புமணிக்கு சூர்யா பதில்!

Also read:  மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

அதே அன்பான மக்கள், ரசிகர்கள், திரைப்படங்களை விரும்புபவர்கள், உங்கள் எல்லா திரைப்படங்களையும் பார்த்து பெரும் ஆதரவை வழங்குபவர்கள் தான் உங்கள் பொய்யைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் ஜெய் பீம் படத்தைப் பார்த்தார்கள், சாதியைக் குறிவைக்கும் சில பொய்களைத் தவிர அனைத்தையும் விரும்பினார்கள். இது தான் உண்மை. அவர்கள் உங்கள் சாதிக்காக உங்கள் ரசிகர்கள் அல்ல.. உங்கள் திறமைக்கும் நடிப்புக்கும் உங்கள் ரசிகர்கள். உங்களுக்கு நான் உட்பட எல்லா ஜாதியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்பதை நினைவில் கொள்ளவும்.நீங்கள் சினிமா துறையில் பெரிய நடிகர் மற்றும் மரியாதைக்குரிய நடிகர் பொய் சொல்வது கருத்து சுதந்திரமாகிவிட்டதா? ஒரு சாதியை குறிவைப்பது கருத்து சுதந்திரமா? நீங்கள் உண்மைக் கதையை கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறீர்கள், நீங்கள் உண்மைகளை கூறலாம் ஆனால் நீங்கள் ஏன் கூறவில்லை? உங்கள் திரைப்படம் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தால், ஏன் திரைப்படத்தில் காலண்டரையும் சில விஷயங்களையும் மாற்ற வேண்டும், ஏனென்றால் அது தவறு. இது தவறு இல்லை என்றால் நீங்கள் விளக்க வேண்டியதில்லை.. அல்லது நீங்கள் மக்களால் கேள்வி கேட்கப்பட மாட்டீர்கள்.

உங்கள் விளம்பரத்திற்காக ஒரு குறிப்பிட்ட சாதியை தூண்டுவது சரியல்ல. மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்துவது தவறு. ஒருவரின் பிறப்பு உரிமையை களங்கப்படுத்துவது தவறு. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பது நல்ல எண்ணம். ஆனால் மற்ற சாதி பற்றி பொய் சொல்வது தவறு. ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: