அப்போலோ மருத்துவமனையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும்போது, காவல்துறை அதிகாரிகளின் அறிவுரையின் பேரில், கண்காணிப்பு கேமரா நிறுத்திவைக்கப்பட்டதாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ நிர்வாகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்போலோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன் குமார் பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, பதிவான காட்சிகள் அழிந்துவிட்டதாகவும், சிகிச்சைக்காக பிற அறைகளுக்கு ஜெயலலிதாவை கொண்டுச் செல்லும்போது, உளவுத்துறை ஐ.ஜி., சத்தியமூர்த்தி, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் சுதாகர், வீரப்பெருமாள், பெருமாள்சாமி ஆகியோரின் அறிவுரையின் பேரில், கண்காணிப்பு கேமராக்கள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகளை, மருத்துவ குழுவில் இருந்த மருத்துவர்கள் ரமேஷ், செந்தில், பாபு ஆப்ரகாம் மற்றும் மருந்துவ பணிகள் இயக்கத்தின் இயக்குநராக இருந்த சத்தியபாமா ஆகியோர் தயார் செய்தார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளை தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ஒப்புதலுக்குப் பிறகு, அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் கையெழுத்திட்டதாகவும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள் இருவரும், கண்காணிப்பு கேரமாக்களை நிறுத்திவைப்பது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், ஆணையத்தில் எவ்வித வாக்குமூலமும் அளிக்கவில்லை.
சிசிடிவி காட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கை தொடர்பாக அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலாக மோகன் குமார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது ஏன் என்று நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியுள்ளார். எனவே மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனை அழைத்து விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Appolo Hospital, Arumugasamy commission, Jayalalithaa CCTV