ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஜெ.தீபா, இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை போயஸ் கார்டனில், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றி அரசுடைமையாக்கியது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபாவும் தீபக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வேதா இல்லத்துக்கு அரசு சார்பில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.67 கோடியே 90 லட்ச ரூபாயை நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்தனர். ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லம் என்பது தனிநபர் சொத்தாக இருப்பதால் அதனைக் கையகப்படுத்துவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை' எனவும் மனுதார்கள் வாதிட்டனர்
வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி இழப்பீட்டுத் தொகையை மாவட்ட நீதிமன்றத்தில் செலுத்தியது தவறு' என்றும் ‘வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாததாக அறிவிக்க வேண்டும்’ எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேநேரம், அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டதாகவும் அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்ட காலங்களில் மனுதார்கள் அவருக்கு உறுதுணையாக இருந்ததில்லை எனவும் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சேஷசாயி, ‘வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய உத்தரவு செல்லாது’ என தீர்ப்பளித்தார். மேலும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களுக்குள் வேதா இல்லத்தை ஒப்படைக்கவும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார். ‘வேதா இல்லம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என ஜெயலலிதாவுக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு?’ எனவும் நீதிபதி சேஷசாயி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், வேதா இல்லம் தொடர்பாக கட்சி உரிய நேரத்தில் தகுந்த முடிவை எடுக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் கூறியிருந்தார். போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய 67 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ள அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா செலுத்தவேண்டிய வருமான வரி பாக்கி தொடர்பான வழக்கை வருமான வரித்துறை தனியாகத் தொடங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Must Read : அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 கைததிகளை விடுதலை செய்ய அரசாணை
இந்த தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறுகையில், இது சாதகமான தீர்ப்பே அல்ல மாறாக இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம் எனவும் தீபா கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, Deepa, Jayalalithaa, Veda nilayam