லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது - ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

 • News18
 • Last Updated :
 • Share this:
  முதல்வர் மீதான சி.பி.ஐ விசாரணையை எதிர்த்து லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை அப்பீல் செய்யும் என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்ய முடியும் என்றும், அ.தி.மு.க என்ற கட்சியின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  முதலமைச்சர் பழனிச்சாமி பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்திருப்பதாவது:-

  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் பத்திரிகையாளர்களை சந்தித்து “உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது” என்று அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  தன் மீதுள்ள ஊழல் புகாருக்கு பதில் சொல்லக்கூட அஞ்சி பரிதாபகரமான நிலையில் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க அமைப்பாளர் மூலம் பதில் சொல்லியிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சரிடம் பதில் இல்லை என்பதையும், அந்த ஊழல் புகார்கள் உண்மை என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.

  “லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு. விஜிலென்ஸ் கமிஷனரும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவர்” என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் எடுத்து வைத்த வாதங்களை நேற்றைய தீர்ப்பில் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

  “நெடுஞ்சாலைத்துறையில் உள்ள எம்பவர்ட் கமிட்டியின் தலைவர் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் இயக்குநர் மற்றும் விஜிலென்ஸ் ஆணையரை நியமிப்பவர் முதலமைச்சர். ஆகவே முதலமைச்சருக்கு எதிரான ஊழல் புகாரினை லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரிப்பது நேர்மையாக இருக்காது” என்று சுட்டிக்காட்டித்தான் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அளித்துள்ளது.

  லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, விஜிலென்ஸ் ஆணையம் போன்ற அமைப்புகளின் நேர்மைத்தன்மை, சுதந்திரம் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றைய தினம் வெளிவந்துள்ள அ.தி.மு.க அமைப்புச் செயலாளரின் பேட்டி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல - அ.தி.மு.க என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.

  ஒரு வார காலத்திற்குள் ஊழல் தொடர்பான கோப்புக்களை சி.பி.ஐ.யிடம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை போடும் விதமாக இந்த பேட்டி அளிக்கப்பட்டுள்ளது.

  லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையின் அப்பீல் பற்றி அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்ய முடியும்? முதலமைச்சர் மீது மட்டுமல்ல - அ.தி.மு.க அமைச்சர்கள் மீது நிலுவையில் ஊழல் வழக்குகளிலும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் நடவடிக்கைகளை அ.தி.மு.க தலைமைக் கழகம்தான் இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தி விருப்பம்போல் ஆட்டிவைக்கப் போகிறது என்றதொரு மிகவும் வெட்கக்கேடான நிலைமை அ.தி.மு.க ஆட்சியில் உருவாகியிருக்கிறது.

  ஆகவே இதற்குப் பிறகும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையோ, விஜிலென்ஸ் கமிஷனோ “தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு” என்று கூறும் எந்தவொரு அருகதையும் அ.தி.மு.க அரசுக்கும் இல்லை. இந்த மெகா ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளாகி இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அறவே இல்லை.

  ஆதாரபூர்வமான ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி - குறிப்பாக தனது துறையிலேயே கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குற்றத்திற்கு உள்ளாகியுள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்து விட்டதால், உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

  பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக நலனுக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். முதலமைச்சர் பதவியிலிருந்து விலக மறுத்தால், அவரை மாண்புமிகு ஆளுநர் அவர்களே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அதுவே தமிழக மக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  Published by:Saravana Siddharth
  First published: