எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நள்ளிரவு 3 மணிவரை தொடர்ந்த சோதனை - 5 கோடி ரூபாய் பறிமுதல்?

எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நள்ளிரவு 3 மணிவரை தொடர்ந்த சோதனை - 5 கோடி ரூபாய் பறிமுதல்?

எ.வ.வேலு

எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டதில், ஐந்து கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேர்தல் பிரசாரத்திற்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அங்கு சென்ற நிலையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர்.

  திமுகவின் திருவண்ணாமலை மாவட்ட தெற்கு பகுதியின் செயலாளராக இருப்பவர் முன்னாள் உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு. தற்போது திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக புதன்கிழமை இரவு திருவண்ணாமலை சென்றார் முக ஸ்டாலின்.

  மாத்தூரில் உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கினார். வியாழன் காலை 10.40 மணிக்கு, அவர் பிரசாரத்திற்கு புறப்பட்ட பின், திடீரென 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அருணை பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நுழைந்து சோதனையில் ஈடுபடத் தொடங்கினர்.

  அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் அருணை கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை, மு.க.ஸ்டாலின் தங்கிருந்த விடுதி அறை ஆகியவற்றை சோதனையிட்டனர்.

  இவை தவிர சோ.கூடலூர் பகுதியில் உள்ள எ.வ.வேலு, அவரது உறவினர்கள் வீடு, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, கரூரில் உள்ள நிதி நிறுவனம் என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருணை மோட்டார்ஸ், கவின் புராடக்ட்ஸ், அக்‌ஷயம் டிரேடர்ஸ் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளை, ஜூவா அறக்கட்டளையின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. நள்ளிரவு 12 மணி வரை நீண்ட இந்த சோதனையில், ஐந்து கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் அதிகளவிலான ரொக்கம் அடுத்தடுத்து வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் இந்த சோதனை தொடர்கிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published:

  சிறந்த கதைகள்