மத்திய அரசின் பணிகளில் தமிழக ஒதுக்கீட்டில் சேருவதற்கு நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
தமிழக அரசு தேர்வுத் துறை வழங்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக அச்சிட்டு வழங்கி தமிழக பணியில் நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சல் அலுவலகங்கள் சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில், ரயில்வே துறை என பட்டியல் நீள்கிறது. இந்த பின்னணியில் கர்நாடக மாநிலத்தில் தமிழக மதிப்பெண் சான்றிதழ்களை போலியாக வழங்கி மத்திய அரசின் பணியில் சேர்ந்த இரண்டு நபர்களை பெங்களூரு நகர அம்ருதவல்லி பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை தேர்வு துறை அலுவலகத்திற்கு நேரடியாக வந்து கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் அளித்த சான்றிதழ் போலி என்பதை உறுதிப்படுத்தி அதற்குரிய சான்றினையும் பெற்றுச் பெங்களூர் போலீசார் பெற்று சென்றுள்ளனர்.
அன்மை காலங்களாகவே மத்திய அரசினுடைய தமிழக ஒதுக்கீடு பணிகளில் தமிழர் அல்லாத வட மாநிலங்களை சேர்ந்த பலர் தொடர்ச்சியாக பணியில் சேர்ந்து வருகின்றனர். இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு வருவதாக சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் தற்போது நூற்றுக்கணக்கானோர் போலி சான்றிதழ்களை தமிழக பணிகளில் சேர வழங்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ்களை வட மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்பு புரோக்கர்கள் மூலமாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. வட மாநிலங்களை காட்டிலும் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ளதால் இங்கு பணியில் சேர்ந்து தமிழகத்திலேயே நிரந்தரமாக தங்க வடமாநிலத்தவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
வேலைவாய்ப்புக்காக வட மாநிலங்களில் தயாராகும் இளைஞர்களை அணுகும் புரோக்கர்கள் தமிழக பணியில் சேர்வதற்கு உதவக்கூடிய வகையில் அவர்களுக்கு தேவையான தமிழக போலி மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வழங்கி அதற்கான கட்டணங்களையும் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலமாக கடந்த சில ஆண்டுகளாக பலரும் மத்திய அரசின் பொதுத் துறைகளில் தமிழக பணிகளில் சேர்ந்து இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.
இதன் பின்னணியில் சில அரசியல் காரணங்களும் முன்வைக்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிக்கைகள் தினசரிகளில் வெளியிட வேண்டும்.
ஆனால் அத்தகைய வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் தமிழக செய்தித்தாள்களில் விளம்பரமாக வழங்கப்படுவதில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் தமிழக இளைஞர்கள் அத்தகைய பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகி வடமாநிலத்தவர்கள் பலர் இத்தகைய முறைகேடுகள் மூலமாக பணியில் சேர்வது வாடிக்கையாக மாறியிருக்கின்றது.
திட்டமிடப்பட்டே தமிழர்கள் புறக்கணிக்கப்படும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசை நோக்கி குற்றச்சாட்டுகள் நீள்கிறது. தற்போது அஞ்சல்துறை பணியிடங்களில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர் அத்தகைய நபர்களின் சான்றிதழ்கள் போலி என அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் உறுதி செய்துள்ளதுடன் புகார் அளிக்கவும் தேர்வுத் துறை பரிந்துரை செய்துள்ளது.
Also read... சின்னமனூர் காவல் நிலையத்தில் பொது நூலகம்
ஆனால் தற்போது வரை அஞ்சல் துறை சார்பில் காவல் துறையில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. ஒருவேளை வடமாநிலத்தவர்கள் இவ்வாறு பணியில் சேருவது மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகிறதா என்கிற கேள்வியும் இதுவரை புகார் அளிக்கப்படாமல் உள்ளதால் தவிர்க்க இயலவில்லை.
உடனடியாக மத்திய மாநில அரசுகள் இத்தகைய முறைகேடுகள் நடக்காத வகையில் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவு நிறைவேறும் என்பது மறுக்க முடியாத உண்மை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fraud