குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் பேரணி!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் பேரணி!
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில்  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி, கோவையில்  அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பாக தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி இன்று மாலை  நடைபெற்றது. உக்கடம் பகுதியில் இருந்து செஞ்சிலுவை சங்கம் வரை நடைபெற்ற பேரணியில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரமாண்டமான தேசிய கொடிகளுடன் பேரணியில் பங்கேற்றனர்.

இதில் சிபிஎம் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் , குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கும்  பொது மக்களும்  பங்கேற்றனர். இதில்  ஐயப்ப பக்தர்களும் கழுத்தில் மாலை அணிந்து, காவி துண்டு போட்டுக்கொண்டு, வெறும் காலுடன்  குடியுரிமைக்கு  எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.


உக்கடம் பகுதியில் இருந்து வளாங்குளம், அரசு கலை கல்லூரி வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடைபெற்றது. சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும், அதுவரை தொடர்  போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர். 3000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட நிலையில், சிறு அசம்பாவிதம் இன்றி அமைதியான முறையில்  பேரணி நடைபெற்றது.
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்