சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, ஈஷா அறக்கட்டளை கல்வி நிறுவனமா இல்லையா என்பதே தற்போது வரை சர்ச்சைக்குரிய கேள்வியாகவே உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஈஷா அமைப்பில் 10 ஆயிரம் சதுர மீட்டர் மட்டுமே கல்வி நிறுவனமாக கருதலாம் என்றும் மற்ற பரப்பளவை கல்வி நிறுவனமாக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது.
கல்வி நிறுவனங்கள்சுற்றுச்சூழல் விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டு சட்டத்தை முன் தேதியிட்டு அமல் படுத்த முடியாது எனபதால் இடைக்கால தடையை நீக்க வேண்டும் நோட்டீஸ் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வாதம் முன் வைக்கப்பட்டது.
Aslo Read : டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
ஈஷா அறக்கட்டளை தரப்பில், உடல், மனம் மற்றும் நன்னெறி மேம்படுத்தம் நிறுவனங்களை கல்வி நிறுவனங்களாக தான் கருத வேண்டும் என்பதால் கல்வி நிறுவனமாக ஈஷா அமைப்பும் உள்ளதால் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என வாதிடப்பட்டது. மத்திய அரசு தரப்பில், ஈஷா அறக்கட்டளை கல்வி போதிக்கும் நிறுவனம் என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி பெற தேவையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் 1,25,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானத்திற்குள் கல்வி நிலையங்களும் அமைந்துள்ளதால சுற்றுச்சூழல் அனுமதி விலக்கு பெற உரிமை உள்ளதாக தெரிவித்து ஈஷாவு அறக்கட்டளைக்கு தமிழக அரசு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், ஈஷா யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Isha Yoga