இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து தமிழக கோவில்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி #FreeTNTemples என்ற இயக்கத்தை தொடங்கியிருக்கும் ஈஷா அமைப்பின் நிறுவனர் சத்குருவிற்கு, எதிர்ப்பு தெரிவித்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய கருத்துக்கள் பூதாகரமாக வெடித்தது.
தமிழக கோவில்களின் கட்டுப்பாட்டை அரசிடமிருந்து விடுவிப்பது குறித்து மட்டுமல்லாமல் மகா சிவராத்திரியன்று ஈஷாவில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்தும் அமைச்சர் பேசிய கருத்துக்களுக்கு விளக்கம் அளித்து ஈஷா அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் (அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்) மிகவும் மரியாதைக்குரிய நபராக விளங்கும் சத்குரு குறித்து நாகரீகமற்ற முறையில் பேசியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருப்பதாக ஈஷா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கடந்த பல ஆண்டுகளாக மனிதநேய சேவையில் அயராது உழைக்கும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் இந்த அசாதாரணமான தாக்குதல் அற்பமாக்குகிறது.
இந்த கலாச்சாரத்தின் சீரழிவு மற்றும் பொது சொற்பொழிவின் மோசமான தரம் குறித்து நாங்கள் வருந்துகிறோம். இது நிச்சயமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மற்றும் மாநில அமைச்சரவையின் மாண்புமிகு உறுப்பினரின் தகுதிக்கு பொருந்தாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மகாசிவராத்திரி நாளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து ஈஷா அமைப்பின் வெப்சைட்டில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
மகாசிவராத்திரியை கொண்டாட ஈஷா மையத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களில், ஒரு சில நூறு நபர்கள் மட்டுமே தங்கள் இருக்கைக்கு கட்டணம் செலுத்துகின்றனர். இந்த சிலருக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஏனென்றால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரிலும் மற்றும் பல கோடி பக்தர்கள் ஆன்லைன் வாயிலாகவும் இலவசமாக இந்த நிகழ்வை காண அவர்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர். யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் அல்லது இலவச உணவு வழங்கப்படுகிறது.” என விளக்கம் தரப்பட்டுள்ளது.
சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து புது தகவல்கள், நிகழ்வுகள் எழும் வரை அவரைப்பற்றி கருத்து தெரிவிக்கப்போவதில்லை என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jaggi vasudev, Sadhguru