அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார் விஜயகாந்த். தாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வராததால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, எல்.கே.சுதீஸ் ஆகியோரை நேரில் சந்தித்து இது குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், எந்த கட்சியுடனும் தேமுதிக கூட்டணி அமைக்காது என்றும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் எனறும், அதற்கான வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், தேமுதிகவுடன் அமமுக ரகசிய போச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது தேமுதிக தரப்பில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், இந்த தொகுதி பங்கீட்டுக்கு ஒப்புக் கொண்டால் வெளிப்படையாக தேமுதிக-அமமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது குறித்து முடிவெடுக்கும் எனவும், தேமுதிக தரப்பில் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Must Read : தேமுதிக விலகியதால் கூடுதல் இடங்களை பாஜக பெற வாய்புள்ளதா? எல்.முருகன் பதில்
இதற்கிடையில், தனித்து போட்டியிடவும் தயராக இருக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாகவும், இன்றைக்குள் முடிவு செய்து வேட்பாளர் பட்டியல் வெளியிட தேமுதிக தரப்பில் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.