• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை... பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம்?

தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை... பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம்?

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எம்.எல்.சி. என்று அழைக்கப்படுவார்.

  • Share this:
    தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை உருவாக்கப்படும் என திமுக கூறியிருந்த நிலையில், இதற்கான தீர்மானம் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெயியாகி இருக்கின்றன.

    தமிழகத்தில் சட்டமன்ற மேலவை கடந்த 1989ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் மேலவையை 2010ஆம் ஆண்டு மீண்டும் கொண்டு வருவதற்கு அப்போதய முதலமைச்சர் மு.கருணாநிதி முயற்சி மேற்கொண்டார். அதற்கான சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டார். எனினும் அந்த முயற்சி நிறைவேறவில்லை.

    இந்நிலையில், கருணாநிதியின் முயற்சியை நிறைவேற்றும் நோக்கில், மீண்டும் சட்டமன்ற மேலவையை கொண்டு வருவதற்கான முயற்சிகளை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இது குறித்து, ஆலோசனைகள் நடத்தப்பட்டன. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெயியாகி இருக்கின்றன.

    அதன்படி, மீண்டும் தமிழகத்தில் சட்டமன்ற மேலவையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை, வரும் 13ஆம் தேதி கூடவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக தோழமை கட்சிகளின் ஒத்துழைப்புடன் இந்தத் தீர்மானத்தை திமுக அரசு நிறைவேற்ற திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பெரிய சிக்கல் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    கருணாநிதி


    எனினும், இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் வழங்குவார். இந்த நடைமுறைகள் சுமுகமாகவும் சாதகமாகவும் அமைந்தால்தான் தமிழக சட்டமன்ற மேலவை நடைமுறைக்கு வரும். 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டிலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்தத் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் ரத்துசெய்யப்பட்டது.

    Must Read : உயிருடன் கலந்திருக்கும் கலைஞர்... தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம்

    சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எம்.எல்.சி. என்று அழைக்கப்படுவார். இந்த உறுப்பினர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே சம்பளம், ஓய்வூதியம் போன்ற சலுகைகள் வழங்கப்படும். எம்.எல்.சி.யாக இருப்பவரும் அமைச்சராக நியமிக்க வாய்ப்புள்ளது. “ ‘மேலவையும் பேரவையும் கப் அண்ட் சாசர் போன்றவை. கப்பில் காபி சூடாக இருந்தால், அதை சாசரில் ஆற்றிச் சூட்டைக் குறைத்துக் கொள்வதைப் போல மேலவை பயன்படுகிறது’ என்று அண்ணா கூறினார். ஆகவே, கப் அண்ட் சாசர் வேண்டும். அதற்கான அனுமதியை விரைவில் பெறுவோம்” என்று 2010ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் சட்ட மேலவை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே செயல்பாட்டில் இருந்தது. அதை 1986ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதிரடியாகக் கலைத்தார். அதன் பின்னர், திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் மேலவையைக் கொண்டுவருவதற்கு முயற்சி மேற்கொண்டு வந்தது. சட்ட மேலவையை கலைத்த எம்.ஜி.ஆர் அவர்கள் முதன் முதலில் சட்ட மேலவை உறுப்பினராகத்தான் கோட்டைக்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: