ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா தலைவராக உள்ள தேனி ஆவின் நிறுவனத்தில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள்; ஆவின் தொழிலாளர்கள் புகார்

ஓ பன்னீர்செல்வம்

விண்ணப்பதாரர்களிடம் இருந்து 1பணியிடத்திற்கு ரூ.30 முதல் 55லட்சம் வரையில் பணம் பெற்றுக் கொண்டு ஆவின் பொது மேலாளர் உள்பட பலர் தமக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்க இருந்த நிலையில் அப்போதைய அதிமுக அரசு விதிகளை மீறி ஆவின் நிறுவனத்தில் 600 பணியாளர்களை நியமனம்; செய்ததாக புகார் எழுந்தது. மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் முன் தேதியிட்டும், விண்ணப்பம் செய்யாத பலரை நேரடியாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  இந்நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரான ஓ.ராஜா தலைவராக உள்ள தேனி ஆவின் நிறுவனத்திலும் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆவின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக துவங்கியுள்ள விசாரணையை முறையாக நடத்திடக் கோரி
  பெரியகுளம் கோட்டாட்சியரிடம் இன்று புகார்  மனு அளித்தனர்.

  தேனி ஆவின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் அளித்த மனுவில், தேனி மாவட்டத்தில் செயல்படும் ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்காத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் எந்தவித அறிவிப்பாணையும் இன்றி ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் பல லட்சங்களை பெற்றுக் கொண்டு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளான 2021 மே 7ஆம் தேதியிட்ட பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர்

  விண்ணப்பதாரர்களிடம் இருந்து 1பணியிடத்திற்கு ரூ.30 முதல் 55லட்சம் வரையில் பணம் பெற்றுக் கொண்டு ஆவின் பொது மேலாளர் உள்பட பலர் தமக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். மேலும் ஆவின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 20கோடி ரூபாய் நிதி கையாடல் மற்றும் டென்டர் விடுவதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே தேனி ஆவினில் கடந்த ஓராண்டாக நியமிக்கப்பட்ட பணிநியமனங்கள், டென்டர் ஆவணங்கள் மீதான மறு ஆய்வு தற்போது துவங்கியுள்ள நிலையில் அதனை முறையாக விசாரணை செய்து முறைகேடாக வழங்கப்பட்ட பணிநியமனங்களை களைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் ஆவின் குளிரூட்டு நிலையத்திற்கு போதிய பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  செய்தியாளர் - பழனிக்குமார்
  Published by:Esakki Raja
  First published: