சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை கே.கேநகரில் உள்ள PSBB பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராஜகோபால் எனும்
ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின் போதே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அநாகரீகமாக பேசுவதாகவும், வாட்ஸ்-அப் செயலியில் பாலியல் உணர்வை தூண்டும் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மாணவிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், PSBB பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், உரிய விசாரணை நடத்துமாறு பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கனிமொழி, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் கருத்து தெரிவித்து இருந்தனர். அதைதொடர்ந்து, பாலியல் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு, பள்ளி நிர்வாகம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பாலியல் தொந்தரவு போன்ற விவகாரங்களை எந்தவொரு சூழலிலும் பள்ளி நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது எனவும், இதுதொடர்பாக உரிய விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கபப்ட்டு உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியை தொடர்பு கொண்டு கேட்ட போது, உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நேற்றிரவுதான் இந்த புகார் தங்களுக்கு தெரியவந்ததாகவும் கூறினர். ஆசிரியர் ராஜகோபால் மீதான புகார் நிரூபணமானால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.