உலக அளவிலான சிறந்த பத்திரிகை புகைப்படக் கலைஞருக்கான விருதுக்கு
மதுரையைச் சேர்ந்த செந்தில் குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த அவரது புகைப்படங்கள், கவனம் பெற வேண்டியவை என்று முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
'வேர்ல்ட் பிரஸ் போட்டோ' அறக்கட்டளையின் சார்பில் உலக அளவிலான சிறந்த பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான விருது அறிவிக்கப்பட்டது. ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஓசியானியா என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
தனிநபர் விவகாரங்கள், கதைகள், நீண்ட கால திட்டங்கள், செய்தித் தருணங்கள், நிகழ்வுகள் மற்றும் பின்விளைவுகள், சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அல்லது தீர்வுகளை ஆவணப்படுத்துதல் ஆகிய தலைப்புகளின் அடிப்படையில் புகைப்பட விருதுக்கான தேர்வு நடைபெற்றது.
இதையும் படிங்க - திட்டமிட்டபடி நாளை ஸ்டிரைக் நடைபெறும்... திமுக தொழிற்சங்கம் அறிவிப்பு
இதில், மதுரையைச் சேர்ந்த புகைப்பட கலைஞரான செந்தில்குமரன் உள்பட 130 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்றனர். நீண்ட கால திட்டங்கள் என்ற பிரிவின் கீழ், பத்தாண்டுகளாக புலிகளுக்கும் மனிதனுக்குமான வாழ்வியல் குறித்த புகைப்படத்திற்காக செந்தில்குமரன் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஆசியக் கண்டத்தின் சார்பில் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
உலக அளவிலான இந்தப் போட்டியில் தென்னிந்தியர் ஒருவர் விருதைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இதையும் படிங்க - தமிழ்நாட்டில் மது ஒழிப்பு பிரசாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படவில்லை’’ – ஆர்.டி.ஐ.யில் தகவல்
விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த செந்தில் குமரன், புலிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான வாழ்வியல் குறித்து மகாராஷ்டிரா, சுந்தர்பன்ஸ் போன்ற புலிகள் காப்பகங்களில் புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவித்தார். தான் எடுக்கும் படங்கள், இருண்ட பக்கம் கொண்டவை என்பதால், அவற்றை கருப்பு-வெள்ளையில் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
செந்தில்குமரனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதலை வெளிக் கொண்டுவரும் அவரது படைப்புகள் அனைவரது கவனத்தையும் பெற வேண்டியவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.