வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். பட பாணியில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - இடைத்தரகர் கைது

கைது செய்யப்பட்ட இடைதரகர்

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக நீண்ட காலம் தரகராக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

  • Share this:
    வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் மருத்துவரை வைத்து நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பெங்களூரை சேர்ந்த இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 2019 இல் 2019-20 ஆம் கல்வியாண்டில் தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் புகார் எழுந்தது. அதனடிப்படையில் தேனி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தேனி மருத்துவக் கல்லூரி மாணவன் உதித் சூர்யா அவனது தந்தை வெங்கடேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேலும் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர், அவர்களுக்கு உதவிய 4 இடைத்தரகர்கள் என மொத்தம் 18 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர்களின் 11 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். ஆதார் ஆணையத்தின் மூலமாக முயன்றும் அவர்களின் விவரங்கள் பெறப்படவில்லை என்பதும் அவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19 கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவன் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாகவும், அதேபாணியில் மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஏற்கனவே இதுபோன்ற வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் அவர்களிடம் தகவலை தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் இவ்வழக்கை தனி வழக்காக பதிவு செய்து, சந்தேகத்திற்கு இடமான மாணவன் தனுஷ் குமார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதியானதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த மருத்துவ மாணவன் தனுஷ் குமார் மற்றும் அவனது தந்தை தேவேந்திரன் ஆகியோரை ஒசூரில் வைத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இடைதரகர் கைது

    இந்நிலையில் கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இவ்வழக்கானது கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் நேற்று மருத்துவ மாணவன் தனுஷ் குமாருக்கு இடைத்தரகராக செயல்பட்ட இடைத்தரகர் ஸ்ரீஹர்ஷா என்பவரை பெங்களூரில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இடைத்தரகரான ஸ்ரீ ஹர்ஷா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக நீண்ட காலம் தரகராக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட தரகர் தும்கூர் மாவட்டம் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பிரமுகர் என்பதும் தெரியவந்துள்ளது. குறைந்த பட்சம் 20 லட்சம் முதல் அதிகபட்சம் 25 லட்ச ரூபாய் பணத்திற்கு சீட்டு வாங்கித் தந்ததும் தெரியவந்துள்ளது.

    Must Read : மூன்று வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை!

    இது போன்று மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக தரகராக செயல்பட்டு கர்நாடக மாநிலத்தில் மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவன் தனுஷ் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனிடம், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக ஓட்டுனர் உரிமத்தை கொடுத்துச் சென்றுள்ளார். சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் மாணவன் தனுஷ் வீட்டில் சோதனை நடத்தியதன் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஓட்டுனர் உரிமத்தை அடிப்படையாக வைத்து தரகர் ஸ்ரீஹர்ஷா பிடிபட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த விவகாரத்தில் ஸ்ரீஹர்ஷா தவிர, முக்கிய தரகராக பீகாரைச் சேர்ந்த ஒருவர் செயல்படுவதாகவும், அவர் மூலம் ஒரு மருத்துவரை வைத்து நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள குறித்து முழு தகவல்களையும் திரட்டி உள்ள சிபிசிஐடி போலீசார் முக்கிய கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கைதான இடைத்தரகர் ஸ்ரீ ஹர்ஷாவை சி.பி.சி.ஐ.டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Published by:Suresh V
    First published: