அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரம்: தீவிரமடையும் ஆலோசனை.. நிகழ்ச்சி அழைப்பிதழில் விடுபட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ் பெயர்..

அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்வதில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மும்முரம் காட்டிவருகின்றனர். இதையொட்டி, கட்சியின் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியே ஆலோசனை நடத்திவருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 11:30 AM IST
  • Share this:
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடந்ததாக தகவல் வெளியானது. மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனும், பின்னர் பிற்பகலில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நடத்திய ஆலோசனை கூட்டங்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.

அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களான வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், செயற்குழுவில் நடந்த விவாதம் கட்சியின் வளர்ச்சிக்கானது எனவும், இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவருக்கும் ஆதரவாக இருப்பதாகவும் கூறினார்.

செயற்குழுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக கட்சிப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசித்ததாக கே.பி.முனுசாமி கூறினார். அதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன், ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியும் ஓபிஎஸ்-ஐ சந்தித்துப் பேசினார்.


மாலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகரன் ஓபிஎஸ்-ஐ சந்தித்தார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதேபோல, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் முதலமைச்சரை தனித்தனியாக சந்தித்துப்பேசினர்.
தன்னை தனிமைப்படுத்தவே செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக, பன்னீர்செல்வம் ஆதங்கப்பட்டதாக வெளியான தகவலை, அதிமுக எம்எல்ஏ செம்மலை மறுத்துள்ளார்.மேலும், சசிகலா விடுதலையானால் கட்சியிலும், ஆட்சியிலும் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தமாட்டார் என்றும் செம்மலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சிக்குள் தனக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை ஓ.பி.எஸ். தற்போது ஆழம் பார்த்து வருவதாக பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டு ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்புஇந்த பரபரப்பிற்கு மத்தியில், சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடைபெறும் விழாவிற்கான அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. தனியார் நிறுவனத்தின் அழைப்பிதழில் மட்டும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading