முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜிகா வைரஸ் தடுப்பு புகையுடன் கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

ஜிகா வைரஸ் தடுப்பு புகையுடன் கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

  • Last Updated :

கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், குமுளியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்திற்கும் ஜிகா வைரஸ் தடுப்பு புகை மருந்தும் தெளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதிதாக ஒரே நாளில் 46 ஆயிரத்து 164 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் அதிகபட்சமாக புதன்கிழமை ஒரே நாளில் 31 ஆயிரத்து 445 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய தினம் பதிவான தொற்று எண்ணிக்கையை விட 30 விழுக்காடு அதிகமாகும்.

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கபட்டதால், மீண்டும் அங்கு கொரானா தொற்று அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால், கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் மூலம் தொற்று பரவுவதை தடுக்கும் விதமாக இரு மாநில எல்லைகளில் தமிழ்நாடு சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்களை தடுத்து நிறுத்தி இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் இ-பதிவு ஆவணங்களை சரிபார்த்த பிறகே அனுமதிக்கின்றனர்.

முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை மேற்கொண்ட பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், எஞ்சிய 15 சோதனைச் சாவடிகளில் முறையாக கண்காணிக்கப்படாததால், தமிழகத்திற்கு பலர் தடையின்றி வந்து செல்வதாகவும், இதனால், தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கன்னியாகுமரி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதே போன்று, கோவை மாவட்டத்தில் வாளையாறு உட்பட 13 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பம் மெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய 3 மலைச் சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், குமுளியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்திற்கும் ஜிகா வைரஸ் தடுப்பு புகை மருந்துகள் தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Must Read : கொரோனா தொற்றும், அடுத்த 10 நாட்களும் - எச்சரிக்கை விடுத்த ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், கேரளாவில் இருந்து ரயில், விமானம் மூலம் தமிழ்நாடு வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன், கேரளாவில் இருந்து வருபவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Kerala, Zika Virus