Home /News /tamil-nadu /

சிலிண்டர் மானியம் வேண்டாம், இதை செய்யுங்க போதும் - இல்லத்தரசிகள் கோரிக்கை

சிலிண்டர் மானியம் வேண்டாம், இதை செய்யுங்க போதும் - இல்லத்தரசிகள் கோரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் அதற்கு பதிலாக விலையை குறைத்தாலே போதும் என இல்லத்தரசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு 'பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் 2020ம் ஆண்டுக்குள் 8 கோடி பயனாளர்கள் இணைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. 8 கோடி பயனாளர்கள் இந்த திட்டத்தில் இணைந்ததை அடுத்து இந்த ஆண்டு உஜ்வாலா 2.0 திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

  இந்த உஜ்வாலா 2.0 திட்டத்தில் சிலிண்டருடன், அடுப்பையும் ஒரு கோடி பேருக்கு வழங்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வாங்குவதற்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த பெண், ஏற்கெனவே சமையல் சிலிண்டர் இணைப்பு இல்லாதிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்தியக் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர் வேறு எந்த சமையல் சிலிண்டர் திட்டத்திலும் பயனாளியாக இருக்கக்கூடாது என அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

  பிரதமரின் உஜ்வாலா யோஜனா ( PMUY ) திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்தியா முழுவதும் 8 கோடியே 03 லட்சத்து 39 ஆயிரத்து 993 இலவச எரிவாயு இணைப்புகள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான IOCL , HPCL & BPCL மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் 32 லட்சத்து 43 ஆயிரத்து 190 இலவச உஜ்வாலா இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது .

  அதேவேளை, நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். கடந்த 2021 ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.825ஆக சிலிண்டர் விலை இருந்தது. ஜூலையில் ரூ.850 ஆகஸ்டில் ரூ.875 எனப் படிபடியாக ஏறிய வந்த சிலிண்டர் விலை மே மாதம் ரூ.1018.50க்கு விற்பனை ஆகி வருகிறது.

  இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மத்திய அரசு, குறைப்பது மாநில அரசா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

  2020ஆம் ஆண்டில் கொரோனா பிரச்சினை வந்தபோது அரசின் வரி வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததால் மானியப் பலன்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதன் பிறகு மீண்டும் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், மானியம் 95 சதவீதம் மக்களுக்கு வரவில்லை எனவும், மானியத் தொகை குறைக்கப்பட்டுவிட்டதாகவும் வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார்கள் வந்துகொண்டு இருக்கின்றன. மானியம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது திடீரென பொதுமக்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயணாளிகளுக்கு ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்கள் வரை ரூ.200 ரூபாய் மானியம் கிடைக்கும் எனக் கூறப்படட்டுள்ளது.

  கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இருக்கும் இந்த சூழலில் சாமானிய மக்களுக்கு இந்த அறிவிப்பால் பெரும் நிம்மதி கிடைத்துள்ளதா என்று மக்களிடம் கேட்ட போது நிச்சயம் நிம்மதி இல்லை என்றே தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்த இல்லத்தரசிகளான இந்திராணி மற்றும் சத்தியா ஆகியோர் மானியம் எங்களுக்கு பயனளிக்கும் என நம்பிக்கை இல்லை. மானியத்திற்கு பதிலாக விலைக் குறைப்பு தான் தேவை என்றுள்ளனர்.

  இது குறித்த அவர்கள் நம்மிடம் கூறுகையில், , "2 ஆண்டு காலம் வங்கி கணக்கில் மானியத்தை செலுத்தாதவர்கள் தற்போது செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. உஜ்வாலா திட்டத்தில் 12 கேஸ் சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் ஒரு ஆண்டுக்கு மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரூ.200 மானியம் வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் ஒருவர் வங்கி கணக்கில் கூட அது முற்றிலும் வந்து சேரவில்லை. தற்போது வருவதற்கு கூடிய மானியம் என்பது வந்து சேருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மானியம் 200 ரூபாய் குறைப்பதற்கு பதிலாக சிலிண்டர் விலை  ரூ.200 குறைக்கப்பட்டால் நன்மையாக இருக்கும்" என்கின்றனர்.

  இதையும் படிங்க: கோவையில் விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பு வழங்கியதில் மிகப்பெரிய மோசடி?

  இல்லத்தரசிகளுக்கு கஷ்டத்தைப் போக்க மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் உஜ்வாலா திட்டம். இதில், அதிக பயனாளிகளை சேர்க்கப்பட்டாலும் பயனாளிகள் ஒருமுறை மட்டுமே அதன் மூலம் பயன் பெறுகிறார்கள். 90 சதவீதம் மக்கள் அடுத்த முறை சிலிண்டர் வாங்கவில்லை என்பதற்கு மானியம் வங்கி கணக்கிற்க்கு முறையாக வராதாதே காரணம் என்று மக்கள் கூறுகின்றனர். மக்களிடையே இன்னும் இதே குழப்ப நிலைதான் நிலவி வரும் நிலையில், மானியத்தை தருவதைவிட சிலிண்டர் விலையை குறைத்தால் நன்மையாக இருக்கும் என மக்களின் கருத்தாக உள்ளது.

  செய்தியாளர் - பிரேம் ஆனந்த், கடலூர்
  Published by:Kannan V
  First published:

  Tags: Gas Cylinder Price, Subsidised LPG cylinders, Subsidy

  அடுத்த செய்தி