இந்த உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி தான். கல்வி இருந்தாலே போதும் நாம் நினைத்த எதையும் நம்மால் சாதிக்க முடியும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் 'கட்டாய கல்வி' என்கிற திட்டத்தை இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இன்று அமல்படுத்த முடிந்தது. ஒரு குடும்பத்தின் நிலையை உயர்த்துவதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்படி பல சிறப்புகளை பெற்ற கல்வியை பெறுவதில் பலருக்கும் வறுமை தடையாக இருந்து வருகிறது. இருப்பினும் தடைகளை தாண்டி வந்தால் தான் சரித்திரம் படைக்க முடியும் என்பதை மிக சிலரே உணர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
கேரளாவில் உள்ள எக்கோம் என்கிற சிறிய கிராமத்தை சேர்ந்தவர் ரஃபிக் இப்ராஹிம். இவர் சிறிய வயதில் வீட்டின் வறுமையின் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். ஆனால் இவருக்கு எப்படியாவது படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. இவரின் தந்தை ஒரு டீ கடை வியாபாரி. சிறு வயதில் இருந்தே மிகவும் கஷ்ட்டப்பட்டு வளர்ந்துள்ளார். எனவே வறுமையால் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு உதவியாக இருக்கும் வகையில் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார்.
ALSO READ | வேளாண் சட்டம் ரத்து: போராட்டத்தை முடித்து ஊருக்கு திரும்பிய விவசாயிகள்
டீ விற்பது, வாகனங்களை சுத்தம் செய்வது மற்றும் இரண்டு ஆண்டுகள் காலணி விற்பனையாளராகவும் வேலை செய்துள்ளார். அதற்கு முன்பு அவரது சகோதரிக்கு ஒருவழியாக வேலை கிடைத்தது. இதனால் அவரது குடும்பத்தின் நிதி சுமை சற்று குறைந்தது. அப்போதுதான் ரஃபிக் தனது படிப்பை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். வறுமையை காரணம் காட்டி இவர் படிப்பில் இருந்து தன்னை விடுவித்து கொள்ளவில்லை.
தனது குடும்ப நிதி நிலைமை சற்று சீராக செல்வதால் பாதியில் விட்ட படிப்பை மீண்டும் தொடங்கினார். கேரளாவில் உள்ள கோழிக்கோடு பல்கலைக் கழகத்தில் பி.ஏ எக்கனாமிக்ஸ் பிரிவை தேர்வு செய்து படித்து வந்தார். பிறகு கலடியில் உள்ள ஸ்ரீ சங்கரா சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வகுப்பையும் தொடர்ந்தார். கல்வியின் மீது தீராத காதல் கொண்ட ரஃபிக் அடுத்தாக எம்.பில் மற்றும் பி.எச்.டி மேற்படிப்பையும் முடித்து விட்டார்.
ALSO READ | நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் : பிரதமர் மோடி, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வாழ்த்து
பேராசிரியர் ஆவதற்கான எல்லா தகுதிகளையும் ரஃபிக் பெற்று விட்டார். இவரின் படிப்பு மூலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் மலையாளம் துறையில் துணை பேராசிரியராக தற்போது பணிபுரிந்து வருகிறார். இவரின் விடாமுயற்சியை பலர் பாராட்டி வருகின்றனர். தற்போது ரஃபிக்கிற்கு 34 வயதாகிறது. கல்வி என்பது எந்த வயதிலும் அடைய கூடிய ஒன்று என்பதை இவர் நம் எல்லோருக்கும் புரிய வைத்துள்ளார்.
இன்று படிப்பதற்கு நேரம் இல்லை என்று சொல்பவர்களின் மத்தியில், படிப்பின் மீது பிடிப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று ரஃபிக்கின் இந்த வாழ்க்கை கதை நமக்கு உணர்த்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.