Home /News /tamil-nadu /

விஜயகாந்தின் உடல்நிலை - விஜய பிரபாகரன் கொடுத்த அப்டேட்

விஜயகாந்தின் உடல்நிலை - விஜய பிரபாகரன் கொடுத்த அப்டேட்

விஜயகாந்த்

விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவை விஜயகாந்த் வந்தவுடன் அறிவிப்பார்

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என அவரின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். திமுக ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய 6 மாதங்களாவது முடிந்திருக்க வேண்டும். இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் திறந்தநிலையில் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும். அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்.

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே வெளிநாடு சென்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் வந்தவுடன் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், விஜயகாந்த்தை உடனிருந்து கவனித்து உதவி செய்ய பிரேமலதாவும் துபாய் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

    பிரேமலதா தனது பாஸ்போர்டை புதுபிக்கும் போது, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கடந்த 2017ஆம் ஆண்டு தொடர்ந்த குற்ற வழக்கை மறைத்ததாக கூறி அவரின் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி பாஸ்போர்ட் சரண்டர் செய்யப்பட்டது. இதனால், பிரேமலதாவால் விஜயகாந்துடன் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேமலதா சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நெல்லையில் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக கீழ் நீதிமன்றதில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை.

    பிரேமலதா வழக்கு தொடர்பாக எந்த தகவலையும், மறைக்கவில்லை. வெளிநாட்டில் சிகிச்சை பெறும் அவரது கணவருக்கு உடனிருந்து மனுதாரர் உதவ வேண்டியுள்ளது. எனவே பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். பிரேமலதா எங்கும் தப்பி செல்லமாட்டார் என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், “பிரேமலதாவின் பாஸ்போர்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

    Must Read : குடிநீர், பேருந்து, ரேஷன் கடை, பள்ளி என எந்த வசதியும் இல்லாமல் மக்கள் அகதிகள் போல் வாழும் கிராமம்

    அதேவேளையில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோம், வெளிநாடு சென்று வரும் தேதியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் தெரிவிப்போம், எங்கும் தப்பி ஓட மாட்டோம் என்ற உறுதிமொழியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் வழங்குமாறு பிரேமலதாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published:

    Tags: DMDK, Premalatha Vijayakanth, Vijayakanth

    அடுத்த செய்தி