தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற் பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் என்றும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக்கூடும் எனவும் இந்திய
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தெற்கு வங்காள விரிகுடா கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்தியப் பகுதிகளில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று (மார்ச் 3, 2022), தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் மையம் கொண்டிருந்தது.
பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் அட்சரேகை 5.3°N மற்றும் தீர்க்கரேகை 84.0°E, இலங்கையின் திருகோணமலைக்கு சுமார் 470 கிமீ தென்-தென்கிழக்கே, தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து 760 கிமீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 870 கிமீ தூரத்தில், சென்னைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 950 கி.மீ. தெலைவில் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
Must Read : 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு ? - திமுக பிரமுகர் ஏவி.சாரதிக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ஐடி ரெய்டு
இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கடற்கரையை ஒட்டி வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால், மார்ச் 3 முதல் 5 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : சசிகலா, தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும்: ஓ.பி.எஸ்ஸிடம் நிர்வாகிகள் வலியுறுத்தல்- அதிமுகவில் மீண்டும் சலசலப்பு
இதன் காரணமாக மார்ச் 4 முதல் 5ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.