• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இல்லம் தேடி கல்வி - திராவிடர் கழகத்தைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு

இல்லம் தேடி கல்வி - திராவிடர் கழகத்தைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு

முத்தரசன்

முத்தரசன்

இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு திராவிடர் கழகத்தைத் தொடர்ந்து இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்பித்தல் மற்றும் கற்றல் பாதிப்புகளை தன்னார்வலர்கள் கொண்டு மேம்படுத்தும் திட்டமே ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ ஆகும்.

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் "இல்லம் தேடி கல்வி" என்கிற திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும். இது முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்தத் திட்டத்துக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தி.மு.கவுடன் ஒத்த கருத்துள்ள திராவிடர் கழகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    இந்தநிலையில், தி.மு.க கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், ‘சமூக நீதி வழங்கலை உறுதி செய்யும் முறையில் தமிழ்நாட்டில் கருணாநிதி சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இடையில் வந்த அஇஅதிமுக அரசு அதனைக் கிடப்பில் போட்டதும் தொடர்ந்து வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாநில உரிமைகளை பறித்து, சமஸ்கிருதமயமாக்கல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

    இதன் ஒருபகுதியாகவே ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ‘திறனறியும் தேர்வு’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒரு பகுதி மக்கள் கற்பதற்கான சக்தியற்றவர்கள் என ஒதுக்கி வைக்கும் வஞ்சகத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தத் திறனறியும் தேர்வுக்கு ‘மதிப்பெண்’ ஏதும் தருவதில்லை என்பதால் மாணவர்களை பாதிக்காது என்று கூறும் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. இந்த நிலையில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.

    இத்திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் இங்கே ஷாகாக்கள் நடத்தும் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டின் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தனி கல்விக் கொள்கை உருவாக்க உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் உறுதியளித்த முதலமைச்சர், ஒன்றிய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு தமிழ்நாட்டின் சமூகநீதி வழங்கல் முறையை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: