ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசுப் பள்ளியில் அதிகரிக்கும் மாணவர்களின் அத்துமீறல்கள்... விதிகள் என்ன? தீர்வு எது?

அரசுப் பள்ளியில் அதிகரிக்கும் மாணவர்களின் அத்துமீறல்கள்... விதிகள் என்ன? தீர்வு எது?

ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது வேதனை அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது வேதனை அளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய மாணவர்கள், நாட்டின் நாளைய தூண்கள் என்ற கருத்தில் மாற்றமில்லாதபோது, அவர்களின் ஒழுக்கத்தில் மட்டுமே சமரசம் செய்து கொள்வது சரியல்ல.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இதன் விளைவை பெற்றோர்களும், ஆசிரியர்களும் எண்ணிப்பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த பதிவு.

  கல்வி... காலத்தாலும், கள்வர்களாலும் கரைக்கவும் முடியாத, களவாடவும் முடியாத மிகப்பெரிய செல்வமாகும். பல தலைமுறைக்கான சொத்துதான் கல்வி. பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் என எத்தனை இருந்தாலும், கல்விச் செல்வம் இல்லாவிட்டால் எல்லாம் வீணாகி விடும்.

  இந்த காரணத்தினாலேயே ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தங்களது குழந்தைகளுக்கு கல்வி முக்கியம் என கருதுகிறார்கள். தங்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப பல பள்ளிகளை பெற்றோர்கள் தேர்வு செய்தாலும், பெரும்பாலானோர் படிப்பது அரசுப் பள்ளிகளில்தான்.

  கொரோனா காலத்திற்கு பிறகு அரசுப் பள்ளிகளின் சேர்க்கை மேலும் உயர்ந்துவிட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை அண்மை நாட்களில் பெற்றோர் நாடிவருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

  ஒன்று கொரோனாவால் எழுந்த பொருளாதார சிக்கல்... மற்றொன்று அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கு மருத்துவப் படிப்பிலும், மற்றவற்றிலும் வழங்கப்படும் சலுகை ஆகும்.

  கொரோனா காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் ஒரு கோடியே 20 லட்சம் மாணவர்களாக இருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை ஒரு கோடியே 25 லட்சத்தை தாண்டியிருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. புதிதாக சேர்ந்த 5 லட்சம் மாணவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயின்றவர்கள் என்பது கூடுதல் தகவல்.

  இதையும் படிங்க - 325 கிடா வெட்டி ஆண்களுக்கு மட்டும் விருந்து... சிவகங்கையில் வினோத திருவிழா

  தனியார் பள்ளி மோகத்தில் இருந்த பெற்றோர், அரசுப் பள்ளிகள் மீது பார்வையைத் திருப்பியிருக்கும் அதே நேரத்தில், மாணவர்களின் அண்மைகால நடவடிக்கைகளும் அச்சம் கொள்ள வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

  தவறு செய்தால் கண்டிக்கும் ஆசிரியரை தாக்க முயற்சிப்பதும்... பள்ளியில் பயன்படுத்தும் பொருட்களை உடைத்து நொறுக்குவதும்...சக மாணவர்களை தாக்கி ராகிங் செய்வதும்... வகுப்பறையிலேயே செல்போனில் மதி மயங்கி கிடப்பதும்... கல்லூரிகளை விட, அரசுப் பள்ளிகளில் இந்த அட்டகாசங்கள் மிக மிக அதிகமாக உள்ளன.

  ஆனால், மாணவர்களுக்கான விதிமுறைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை கொடுத்துள்ள தகவல்கள் அப்படியே தலைகீழாக இருக்கிறது.

  அதில் முதலாவது, காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இன்றைய நாட்களில் எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகிறார்கள் என்பது கேள்விக்குறி? ஆனால் உரிய நேரத்தில் வருவதுதான் 2வது விதிமுறை.

  இதையும் படிங்க - ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

  மாணவ, மாணவியர் தங்களது வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைக்க வேண்டும். மாணவர்கள் கையேட்டை நாள்தோறும் பள்ளிக்கு தவறாமல் கொண்டு வர வேண்டும் என்ற விதியும் உண்டு.

  பல பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களைப் போல ஒரு நோட்டை மட்டுமே கொண்டு வருகிறார்கள். தினந்தோறும் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை கையேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும்...

  வீட்டுப்பாடங்களை நிறைவு செய்து ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் விதி. வீட்டுக்குச் சென்றாலே செல்போனும் கையுமாக இருக்கும் மாணவர்களில் எத்தனை பேர் வீட்டுப் பாடங்களை முடிக்கிறார்கள் என்பது கேள்விக்குறி.

  பள்ளியின் உடைமைகளைப் பாதுகாக்க வேண்டும்... ஆனால், உடைமைகளை உடைத்து நொறுக்குவதே மாணவர்கள்தான். பள்ளித் தேர்வு நாட்களில் விடுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாவிட்டால் விடுப்புக் கடிதம் கொடுக்க வேண்டும்.

  ஆசிரியர்கள் வகுப்பிற்குள் நுழையும்போது அமைதியாக எழுந்து நின்று மரியாதை செலுத்துவதோடு, அமைதி, பணிவுடன் நடக்க வேண்டும் என்றாலும், இன்றைய நாட்களில் இவை அனைத்தும் தலைகீழாகத்தான் உள்ளது...

  கைபேசிகளை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். ஆனால், கைப்பேசி இல்லாமல் பள்ளிக்கு வருவதையே தவிர்த்து விடுகிறார்கள் பல மாணவர்கள்.

  இந்நிலையில், இதற்கு கட்டுப்பாடு அவசியம் என்றே கூறுகின்றனர் கல்வியாளர்கள்.

  இன்றைய மாணவர்கள், நாட்டின் நாளைய தூண்கள் என்ற கருத்தில் மாற்றமில்லாதபோது, அவர்களின் ஒழுக்கத்தில் மட்டுமே சமரசம் செய்து கொள்வது சரியல்ல.

  எனவே, சரியான வழிமுறைகளை கடைப்பிடித்து கொரோனாவை கட்டுப்படுத்திய நாம், நமது பிள்ளைகளையும் நெறிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

  நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக, பெரிய பத்மநாபன்...

  First published:

  Tags: Govt School, Students