தமிழகத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருவதை சில முக்கியமான மருத்துவமனைகளில் இருந்து கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் இதற்கான முக்கிய காரணங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தமிழகத்தில் சிறுநீரக பாதிப்பு முன்னெப்போதையும் விட வேகமாக அதிகரித்து வருகிறது. அது குறித்த பின்வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்ற உள்நோயாளிகளின் எண்ணிக்கை 2010 - 2016க்கு இடைப்பட்ட காலத்தில் 150 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. புறநோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து 2016இல் 42 ஆயிரத்து 658 பேர் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
இதே மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்த நோயாளிகளின் எண்ணிக்கையோ அபரிமிதமாக அதிகரித்து நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உள்நோயாளிகளின் எண்ணிக்கை ஏழு மடங்கு கூடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 சிறுநீரக நோயாளிகள் வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 140ஆக உயர்ந்துள்ளது.
கோவையும் இதற்கு விதிவிலக்கல்ல. நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை இந்திய சராசரியை விட 10 மடங்கு அதிகம் என அதிர வைக்கும் புள்ளிவிவரத்தைக் கூறுகிறார் 28 ஆண்டுகளாக இது பற்றி ஆய்வு செய்யும் மருத்தவர் பாலசுப்பிரமணியம்.
அண்மைக்காலத்தில் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயாலும், ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட வேகமாக அதிகரித்து வருவதே சிறுநீரக நோய்க்கு முக்கியக் காரணமாக மருத்துவர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. 45 விழுக்காடு நோயாளிகளைத் தருவது சர்க்கரை நோய்தான் எனக் கூறப்படுகிறது.
ஆரோக்கியமான உணவும் வாழ்க்கை முறையும் இருந்தால் சிறுநீரக நோயைத் தடுக்கலாம் எனக் கூறும் மருத்துவர்கள், நோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவது, அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.