கனமழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.28 அடியாகவுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

 • News18 Tamil
 • | November 03, 2021, 09:07 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 25 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 14,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 112.28 அடியாகவுள்ளது.

  அணையின் நீர் இருப்பு 81.69 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு
  வினாடிக்கு 10,858 கன அடியிலிருந்து, 10,904 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

  டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், திருவாரூரில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்ததால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுப்பட்ட நிலையில், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கண்ணமங்கலம், சேவூர், களம்பூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. ஆனால், மாலையில் பெரும்பான்மை பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரம் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன், தொடர் மழையால் ஆரணியை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம், 10 ஆயிரத்து 860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்காக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கனமழையால் வெள்ளச் சேதம் ஏற்படக் கூடாது என்பதற்காக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்

  வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது இந்த நிலையில் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  Must Read : School Holiday |கன மழையால் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இரண்டாவது நாளான இன்றும் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.