தருமபுரியைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள DNC நிதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை... கணக்கில் வராத 6 கோடி ரூபாய் இதுவரை பறிமுதல்...

மாதிரிப் படம்

தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடந்து வரும் வருமான வரி சோதனைகளில் கணக்கில் வராத 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  அமைச்சர் எம்.சி.சம்பத்தின் நெருங்கிய உறவினர்கள், வியாபார பங்காளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடக்கிறது. சென்னை, தருமபுரி என 6 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்து வரும் வருமான வரி சோதனையில் இதுவரை கணக்கில் வராத பணத்துக்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டையில் உள்ள சம்பத்தின் சம்பந்தி இளங்கோவனுக்குச் சொந்தமான விஜய் வித்யாலயா ஆண்கள் பள்ளியில், 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூரில் சம்பத்தின் நண்பர்களின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையின் நீட்சியாகவே தருமபுரியில் புதிய சோதனை நடத்தப்பட்டுள்ளது.

  இவருக்கு சொந்தமான டிஎன்சி நிதி நிறுவனத்தின் சென்னை தியாகராய நகர் அலுவலகத்தில் மட்டும் 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திலும், தனியார் பள்ளி கூட்டமைப்பு மாநில செயலாளராகவும் இளங்கோவன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சிவகங்கை அதிமுக மாவட்ட செயலாளரும் வேட்பாளருமான செந்தில்நாதனின் மைத்துனர் நக்கீரன் என்பவரின் வீட்டில் கணக்கில் வராத 60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் இந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காரில் எடுத்து செல்லப்பட்ட அதிமுக துண்டு, ஜெயலலிதா, எம்ஜிஆர் புகைப்படம் பொறித்த டீ சர்ட் என மொத்தம் 21,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அமைச்சர் கே.சி வீரமணி, அதிமுக நிர்வாகி அழகிரி, அச்சக உரிமையாளர் விக்ரம் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... தேர்தல் பிரசாரத்துக்காக இன்று காலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி...

  வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட காவலூர் மலை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 3 கோடியே 35 லட்சம் மதிப்பிலான 70 கிலோ தங்க நகைகள் சிக்கின. முதல் கட்ட விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள நகைக் கடைகளுக்கு தங்க நகைகளை விநியோகம் செய்துவிட்டு வேனில் திருப்பத்தூர் நோக்கி செல்ல இருந்தது தெரியவந்தது. நகைக் கடைக்கு சொந்தமான அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: