திரைப்பட தயாரிப்பாளர்கள். விநியோகஸ்தர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 200 கோடி ரூபாய் வருமானம் மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
விக்ரம், கேஜிஎப் உட்பட பல மெகா ஹிட் திரைப்படங்களை விநியோகித்தவர்கள், தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது. லாபத்தில் கட்ட வேண்டிய உரிய வரியை கட்டாமல் மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து திரைப்பட பைனான்சியர் அன்பு செழியன், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்காளன கலைப்புலி எஸ்.தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர் பிரபு, தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, மதுரை, வேலூர் மற்றும் கோவையில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரகசிய மற்றும் மறைவான இடங்களில் வைக்கப்பட்டிருந்த கணக்கில் காட்டப்படாத பணப்பரிவர்த்தனை மற்றும் முதலீடு தொடர்பான பல்வேறு முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக திரைப்பட பைனான்சியர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத கடன் தொகை தொடர்பான உறுதிப் பத்திரங்கள் சிக்கி உள்ளன. அதன் மூலம் பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுடன் பைனான்சியர்களுக்கு உள்ள ரகசிய தொடர்பும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம் - அரசுக்கு கோரிக்கை
குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் சமர்பிக்கப்பட்ட வருமான கணக்கு வழக்குகளைத் தாண்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதை உறுதிபடுத்தும் வகையிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத வருமானத்தை, பல தொழில்களில் கணக்கில் காட்டப்படாத முதலீடுகளாக வைத்திருப்பதும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறையின் அறிக்கையில் உள்ளது.
திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு தொடர்புடைய வருமான வரித்துறை சோதனையில் திரையரங்குகள் மூலம் வரும் வருமானத்தை மறைத்து கணக்கு காட்டியது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திரைப்பட விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒரு சிண்டிகேட்டை உருவாக்கி உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பாதிக்கப்பட்ட பகுதிகளை படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்...
சோதனையில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத 26 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.