• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கமல்ஹாசன் கட்சி பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு - ரூ.8 கோடி பறிமுதல்

கமல்ஹாசன் கட்சி பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு - ரூ.8 கோடி பறிமுதல்

கமல்ஹாசன்- சந்திர சேகரன்

கமல்ஹாசன்- சந்திர சேகரன்

அனிதா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தை நடத்திவரும் சந்திரசேகரன் மருத்துவ உபகரணங்களையும் தயாரித்துவருகிறார்.

  • Share this:
மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளரும் தொழிலதிபருமான சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூரின் முக்கிய தொழிலதிபர் அனிதா டெக்ஸ்காட் சந்திரசேகரன் வீடு அலுவலகம், உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். திருப்பூர் லட்சுமி நகரில் அனிதா டெக்ஸ்காட் பின்னலாடை நிறுவனத்தில் 8 அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கொரோனா கவச ஆடைகள், முக கவசங்களை உற்பத்தி செய்து ஒப்பந்தங்கள் மூலம் தமிழக அரசுக்கு வழங்கி வருகிறார்.

இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளராகவும் உள்ளார். அனிதா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தை நடத்திவரும் சந்திரசேகரன் மருத்துவ உபகரணங்களையும் தயாரித்துவருகிறார். இவரது நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் நான்கு வாகனங்களில் சென்ற வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சந்திரசேகரனின் சொந்த சகோதரரும் மதிமுக திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜனுக்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், அவரது நண்பரும், சென்னியப்பா நகர் பகுதியில் உள்ள திமுக நகர செயலாளர் தனசேகர் என்பவர் வீடுகளிலும் இரண்டு வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் 8 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை கூறியுள்ளது. முதலீடு, வரவு செலவு குறித்த ஆவணங்கள் குறித்த விசாராணை தொடர்ந்து நடந்துவருகிறது. சோதனைக்குள்ளாகியுள்ள சந்திரசேகரனுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் என்ன தொடர்பு?

கோவை தெற்கு தொகுதியில் களம் கண்டுவரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் தொழில் கூட்டாளிதான் இவர். நடிகர் கமலுடன் ஒரே மேடையில் தோன்றியுள்ள சந்திரசேகரன் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினர், மத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் பொருளாளராக இருப்பதாக சொல்கிறது அக்கட்சியின் இணையதளம்.

இதைவிட அடுத்த அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், நடிகர் கமல்ஹாசனின் தொழில் கூட்டாளி என்பதுதான். கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டு முகவரியில் ராஜ்கமல் FRONTIERS PRIVATE LIMITED என்ற பெயரில் பதிவாகியுள்ள நிறுவனத்தில் நடிகர் கமல்ஹாசனும், தற்போது வருமானவரி சோதனைக்குள்ளாகியுள்ள சந்திரசேகரனும் இயக்குநர்களாக உள்ளனர். கடந்த மாதம் இரண்டு கோடி ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்கிறது மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை.



ஊழக்கு எதிரானவர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் கமல்ஹாசனுக்கு சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில் நடக்கும் சோதனை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருமானவரித்துறை சோதனை குறித்து மக்கள் நீதிமய்யத்தின் சார்ப்பிலோ, அல்லது சந்திரசேகரன் தரப்பிலிருந்தோ எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Must Read : திருமங்கலத்தில் அதிமுகவினர் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் : விசாரணை நடத்திய பறக்கும்படை

 

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வருமானவரித்துறையின் இந்த நடவடிக்கை மக்கள் நீதிமய்யத்தினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: