• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சுதாகரனின் ரூ.30 கோடி சொத்துகள் முடக்கம் : வருமானவரித்துறை அதிரடி

சுதாகரனின் ரூ.30 கோடி சொத்துகள் முடக்கம் : வருமானவரித்துறை அதிரடி

வருமானவரித்துறை

வருமானவரித்துறை

சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை வருமானவரித்துறை கடந்த 8ஆம் தேதி முடக்கியது.

  • Share this:
    பினாமி சட்டத்தின்கீழ் சுதாகரனுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, சிறுதாவூரில் உள்ள சொத்துகளை பினாமி சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை முடக்கியுள்ளது. இதை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் இந்த சொத்தின் மூலம் ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2017ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் அண்ணன் மகனுமான வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்ப்பட்டது.

    இந்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் சோதனையில் சிக்கின. அந்த ஆவணங்கள் அடிப்படையில் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானவரித்துறை முடக்கியது.

    ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் பெயரில் இருந்த 65 சொத்துகள் 2020ஆம் ஆண்டு பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், ஆலந்தூர், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 200 ஏக்கர் நிலங்கள் உள்பட ரூ.300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் கையகப்படுத்தப்பட்டன. சசிகலாவுக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான பையனூர் பங்களாவை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை கடந்த 8ஆம் தேதி முடக்கி நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில், தற்போது சுதாகரனுக்கு சொந்தமான நிலங்கள் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா உள்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் கிடைத்த ஆணவங்களின் அடிப்படையில் அவரது சொத்துகள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, வி.என்.சுதாகரனுக்கு சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூரில் உள்ள 30 கோடி ரூபாய் மதிப்பிலான 21 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளது.

    Must Read : நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

    இதை, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் இந்த சொத்தின் மூலம் ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூரு சிறையில் உள்ள சுதாகரனுக்கும், ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் மற்றும் திருப்போரூர் சார் பதிவாளர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: