டெல்லியில் கட்டப்பட்டுள்ள
திமுகவின் அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான
மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும், தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் தீனா தயாள் உபாத்யாயய் சாலையில் அமைந்துள்ள அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் அலுவலக வாயிலில் திரண்டிருந்தனர். அவர்கள் தவிர நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களும் வந்திருந்தனர்.
இதையும் படிங்க - யூனிட்டுக்கு 35 பைசா உயர்வு.. மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
பாஜக, கம்யூனிஸ்ட், திமுக என முக்கிய கட்சிகளில் அலுவலகங்களும், ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இந்தப்பகுதியில் இருந்தாலும், அடிக்கடி செயின் பறிப்பு, செல்போன் திருட்டு, கொள்ளை என மற்றவர்களிடம் கைவரிசையை காட்டும் கும்பல் இப்பகுதியில் அதிகம் வலம் வரும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று மாலை அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்று விட்டு வெளியே வந்த திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுடன் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்த போது அவரது பர்ஸில் இருந்த விலை உயர்ந்த ஐபோன் திருடுபோயுள்ளது.
திமுக அலுவலகம், தேநீர் விருந்து நடைபெற்ற இடம் என எந்த இடத்திலும் போன் கிடைக்காத நிலையில் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அவர் போனை எங்கேனும் மறந்து வைத்துவிட்டாரா அல்லது வெளியே கூட்டத்தில் நின்றபோது யாரேனும் திருடினார்களா என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தப் பகுதி சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் மொபைல் உட்பட சுமார் 9 போன்கள் திருடப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இனி வரும் காலங்களில் இதுபோன்று சம்பவங்களை தடுக்கும் வகையில் அந்தப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் ஆலோசித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.