• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆளுநரின் காரை மறிக்க பொதுமக்கள் முயற்சி: திருவாரூரில் பரபரப்பு!

ஆளுநரின் காரை மறிக்க பொதுமக்கள் முயற்சி: திருவாரூரில் பரபரப்பு!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் ஏராளமான மக்கள் கூடி நின்று ஆளுநரின் காரை மறிக்க முற்பட்டனர். ஆனால் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் சென்ற காரை மறிக்க முடியாத நிலையில், பின்னால் வந்த அதிகாரிகளின் கார்களை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருவாரூர் மாவட்டத்தில் தமிழக ஆளுநரின் காரை மறிக்க பொதுமக்கள் முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திருவாரூர் வருகை தந்தார். திருவாரூரிலிருந்து மன்னார்குடி வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் சேதங்களை பார்வையிட்ட அவருடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர். அப்போது காசாங்குளம் என்ற இடத்தில் புயலில் சிக்கி கீழே விழுந்து கிடந்த, உயரழுத்த மின் கோபுரத்தை கண்டதும், காரைவிட்டு இறங்கி பார்வையிட்டார்.

    அதிகாரிகளிடம் இதை சரி செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதையும் கேட்டறிந்தார். தொடர்ந்து சேரி கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்ற பெண்மணியின் இடிந்த வீட்டை பார்வையிட்டு ஆறுதல் கூறிய ஆளுநர், அரசின் உதவித் தொகை 18500 ரூபாய் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். பின்னர் கோட்டூரில் உள்ள தெருக்களில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து திருப்பத்தூர் என்ற இடத்தில் விவசாயிகள் சாலையோரம் நின்றதைப் பார்த்து காரை நிறுத்தி, விவசாயிகளிடம் பேசினார். அப்போது அங்கிருந்த தங்கவேலு என்ற விவசாயி, புயல் தாக்கியதில் திருப்பத்தூர் பகுதி கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாகவும், அதிகாரிகள் யாரும் வரவில்லை என இந்தியிலேயே தெரிவித்தார். அதற்கு நிலைமை சரியாகிவிடும் என இந்தியிலேயே ஆளுநரும் பதில் கூறினார்.

    தொடர்ந்து விளக்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு ஆளுநர் சென்றபோது, அமைச்சர்கள் காமராஜ், செல்லூர்ராஜு, மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர். ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் வருவதை கண்ட மக்கள் தங்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மக்களை ஆளுநர் சமாதானப்படுத்தி, உரிய வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவிட்டு புறப்பட்டார்.

    அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் ஏராளமான மக்கள் கூடி நின்று ஆளுநரின் காரை மறிக்க முற்பட்டனர். ஆனால் ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் சென்ற காரை மறிக்க முடியாத நிலையில், பின்னால் வந்த அதிகாரிகளின் கார்களை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதற்குள் ஆளுநர் திருத்துறைப்பூண்டி சென்று, அங்குள்ள புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை பார்வையிட்டு முத்துப்பேட்டைக்கு சென்றார்.

    இதனிடையே மேட்டுப்பாளையத்தில் மறிக்கப்பட்ட ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் உட்பட அனைத்து அதிகாரிகளின் வாகனங்களும் மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு, ஆளுநருடன் செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டன. பின்னர் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்து விரைவில் உரிய வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அரை மணி நேரத்துக்கும் மேலாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இன்றி ஆளுநரும், அமைச்சர்களும் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் புயல் பாதிப்பு நிவாரண பணிகளை பார்வையிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: