தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்
தமிழகத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில், இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 716மெகாவாட் மின்சாரம் கிடைக்காததே மின் தட்டுப்பாட்டிற்கு காரணம்.
தமிழகத்தின் மின் உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவை என்ற நிலையில், அதற்கு குறைவான நிலக்கரி மட்டுமே கிடைப்பதும் தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாததற்கு காரணம்.
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசு காரணமா? அண்ணாமலை பதில்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு தொடர்பாக அரைவேக்காட்டுத் தனமான கருத்துக்களை முன்வைப்பதாக விமர்சித்த அமைச்சர், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு குறித்து அண்ணாமலை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தமிழகத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு இரண்டு மாத காலத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு டெண்டர்கள் கோரப்பட்டு இரண்டு நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்னும் இரண்டொரு நாளில் தமிழகத்தில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.