சென்னை- திருவள்ளுரில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்!

சென்னை- திருவள்ளுரில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 6, 2018, 9:08 AM IST
  • Share this:
சென்னை - திருவள்ளுர் மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி மாநிலத்திலும், நீலகிரி, திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மழை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில், நாளை அதிதீவிர கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் பரவலாக பலத்த மழை பெய்தது. நகரின் மையப்பகுதிகளான அண்ணா சாலை, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையார், எழும்பூர், வடபழனி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் விடியவிடிய மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

உதகை மற்றும் குன்னூர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் விழுந்ததால்,  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.


தூத்துக்குடியில் இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மழை பெய்ய தொடங்கியதுமே பல இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். திருச்செந்தூர், ஆத்தூர், ஆறுமுகநேரி பகுதிகளில் தொடர்ந்து  2 மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் மழைநீர் சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரம் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

சுற்றுலா பகுதியான கொடைக்கானலிலும்  தொடர் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அருவிகள், நீர்தேக்கங்களில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி ஜி வினய் அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக தொடரும் கனமழையால்,  இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்  எச்சரித்துள்ளார்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வீரசோழன் ஆற்றில்,  தொடர் மழையால் ஏற்பட்ட உடைப்பால் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

புதுச்சேரியில் கனமழை காரணமாக, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று இயங்காது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
First published: October 6, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading