தொழில் நிறுவனங்கள், கடைகளில் தமிழ்நாடு அரசின் அரசாணை படி தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும். முதல் முறை ஒரு தொகை அபராதமும், அடுத்த முறை 2 மடங்கு அதிகாரமும் தொடர்ந்து அபராத தொகையை அதிகப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில் தமிழ்நாடு அரசின் அரசாணை படி, 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள்தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும். என தமிழ்நாடு அரசு 1982 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது.
கடந்த 2018-2022 வரை 6,074 கடைகளில் ரூ. 4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவக சட்டப்படி 349 உணவகங்களிடம் இருந்து ரூ. 32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது என கூறப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு விதிமுறைபடி கடைகள், தொழில் நிறுவனங்களில் பெயர்பலகை வைக்காமல் இருப்பவர்களுக்கு தற்போது வரை 50 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படுகிறது. இது ஏற்புடையது அல்ல. அரசாணை வந்த போது 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் அப்போதைய தங்கத்தின் விலையும், தற்போதைய தங்கத்தின் விலையும் ஒப்பிடுகையில் பெரும் அளவு விலை உயர்ந்து உள்ளது. எனவே, இன்றைய சூழலை கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள், கடைகளில் அரசாணை படி தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும். முதல் முறை ஒரு தொகை அபராதமும், அடுத்த முறை 2 மடங்கு அதிகாரமும் தொடர்ந்து அபராத தொகையை அதிகப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து விதி மீறலில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், அரசாணை படி தமிழ் மொழியிலெ பெயர் பலகை வைப்பதை தொடர்பான உத்தரவை நடைமுறைப்படுத்தியது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai High Court, Tamil