Saravanan: காலையில் கட்சியில் இணைந்தவருக்கு மதியம் எம்.எல்.ஏ சீட் வழங்கிய பாஜக!

பாஜக-வில் இணைந்த சரவணன்

சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த சரவணன், இன்று காலை தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து, பாஜக-வில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டார்.

  • Last Updated :
  • Share this:
    காலையில் கட்சியில் இணைந்தவருக்கு மதியமே எம்.எல்.ஏ சீட் கொடுத்துள்ளது தமிழக பாஜக.

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைப்பெறுகிறது. இந்நிலையில் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை என தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    அதிமுக - பாஜக, திமுக - காங்கிரஸ் என்ற கூட்டணியில் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் இத்தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் நேற்று முன் தினம் திமுக வேட்பாளர் பட்டியலையும், நேற்று தேர்தல் அறிக்கையையும் அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதில் ஒரு சிலருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டிருந்தது.

    வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணனும் ஒருவர். அதோடு அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அதன் வேட்பாளராக பொன்னுத்தாய் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில் சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த சரவணன், இன்று காலை தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து, பாஜக-வில் தன்னை முறைப்படி இணைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக தனது வேட்பாளர்களை அறிவித்தது. அதில் காலையில் கட்சியில் இணைந்த சரவணனுக்கு மதுரை வடக்கில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

    காலையில் கட்சியில் இணைந்தவருக்கு மதியம் எம்.எல்.ஏ சீட்டா என ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் மக்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: