இளவரசிக்கு கொரோனா தொற்று இல்லை... சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு

இளவரசிக்கு கொரோனா தொற்று இல்லை... சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு

சசிகலா

ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவதில் எந்த சிக்கலும் இல்லை என, அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சசிகலா உடன் சிறையில் இருந்த இளவரசிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை, மணிபால் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுடன் கடுமையான நுரையீரல் அழற்சி பாதிப்பும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  சசிகலாவுக்கு நுரையீரல் அழற்சி ஏற்பட்டுள்ளதால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. இதனால் 10 லிட்டர் என்ற அளவில் அதிகப்படியான அழுத்தப்பட்ட ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. . தற்போது சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  சர்க்கரை வியாதிக்கான இன்சுலின், ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு மருந்துகள் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ரெம்டிசிவிர் மருந்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெப்டாஸ் வகை மருந்துகளும் வியாழக்கிழமையில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

  கொரோனா காரணமாக குறைந்தது ஏழு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதால் விடுதலையாவதற்கு முன் சசிகலா சிறைக்கு திரும்ப வாய்ப்பு குறைவாக உள்ளது.

  இதனிடையே, ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவதில் எந்த சிக்கலும் இல்லை என, அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை தேதிக்குப் பிறகு சசிகலாவை சிறையில் வைத்திருக்க, சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்படுகிறது.

  இதனிடையே, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை, மணிபால் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற தடையில்லா சான்றிதழ் வழங்க விக்டோரியா மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

  மேலும் சிறையில் சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த  தகவலை பரப்பன அஹ்ரகார சிறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்
  Published by:Vijay R
  First published: