தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியூஸ் 18 தமிழக ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு “இல்லம் தேடிக் கல்வி” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
. தி.மு.கவுடன் ஒத்த கருத்துள்ள திராவிடர் கழகம் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதன் தலைவர் கி.வீரமணி, 'இல்லம் தேடி கல்வித் திட்டம்' என்பது ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் அதன் கல்விக் கொள்கையின் நுழைவே ஆகும் என்று விமர்சித்திருந்தார். இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்.
இத்திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் இங்கே ஷாகாக்கள் நடத்தும் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக நியூஸ் 18 தமிழ் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து எழுந்துள்ள எதிர்ப்புகளை எச்சரிக்கையாக மட்டுமே பார்க்கிறோம். இந்த திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தலைவர்களின் கருத்துக்களை கவனத்துடன் பரிசீலிப்போம்.
மேலும் படிக்க: சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே முரண்பாடு ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்
சித்தாந்த ரீதியாக கொள்கை கொண்ட தன்னார்வலர்களை இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அனுமதிக்கமாட்டோம். பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பின்புலம் முழுமையாக ஆராயந்த பிறகே திட்டத்தில் அனுமதிப்போம். அதனையும் மீறி யாரேனும் பதிவு செய்தால் அவர்கள் திட்டத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.
இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ள தலைவர்களுக்கு இத்திட்டம் குறித்து முழுமையாக இன்று மாலைக்குள் விளக்கம் கொடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
இதையும் படிங்க: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா- பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.