பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும் : முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

  • Share this:
    எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 7-வது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவரது சொந்த தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    எடப்பாடி தொகுதிக்குள்பட்ட வனவாசி பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தபோது அவர் கூறியது.  எடப்பாடி தொகுதி மக்கள் 2011 மற்றும் 2016-ல் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். உங்களை ஒவ்வொரு முறை சந்திக்கும்போது, எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. உங்கள் ராசியால்தான் நான் முதலமைச்சராக ஆகியுள்ளேன். பல முறை வந்த போதும் வனவாசியில் பேசவில்லை என்பதால் இப்போது வந்துள்ளேன். 234 தொகுதியில் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடிக்குத்தான் உள்ளது. எங்கு சென்று சொன்னாலும் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை உங்களால்தான் கிடைத்தது. எத்தனை பிறவி எடுத்தாலும் எடப்பாடி தொகுதி மக்களை மறக்க மாட்டேன். நினைவில் வைத்திருப்பேன்.ஒவ்வொரு முறையும் எனக்கு உயர்வைக் கொடுத்து வரும் வாக்காள பெருமக்கள் இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். எவ்வளவோ கூட்டங்களில் பேசினாலும், சொந்த மண்ணில் பேசுகிறபோது எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. வனவாசி பேரூராட்சி கடந்த முறை அதிக வாக்குகளை அளித்தீர்கள்.உங்கள் வீட்டை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிற்பதாக எண்ணி வாக்களிக்க வேண்டும். நான் எப்போதும் அதே பழனிசாமியாகத்தான் உள்ளேன். உங்களில் ஒருவராகத் தான் நான் உள்ளேன். உங்கள் எல்லோரையும்தான் முதலமைச்சராக பார்க்கிறேன். இந்த முறை அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக நிற்கும் வாய்ப்பு  கிடைத்துள்ளது. மீண்டும் முதலமைச்சராவதற்கு எனக்கு வாக்களிக்க வேண்டும்.

    வரும் சட்டமன்றத் தேர்தல் முக்கியமானத் தேர்தல். ஜெயலலிதா இல்லாத நிலையில், என்னை முதலமைச்சராக முன்னிறுத்தும் தேர்தல். எடப்பாடியில் இருக்கும் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் இந்த வெற்றி அமைய வேண்டும். தமிழகத்தில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்ற வாய்ப்பைத் தர வேண்டும். விஜய் ரசிகர் மன்ற நண்பர் ஆதரவளித்துள்ளார் அவருக்கு நன்றி. திமுக தலைவர் ஸ்டாலின் போகும் இடமெல்லாம் பொய்யைத் தவிர எதுவும் பேசுவதில்லை. எடப்பாடிக்கு வந்து நான் எதுவுமே செய்யவில்லை என்கிறார். நீங்கள் வைத்த கோரிக்கை எல்லாமே நிறைவேற்றியுள்ளேன். பாலிடெக்னிக் கல்லூரி வனவாசியில் திறக்கப்பட்டுள்ளது. நம்முடைய குழந்தைகளை நம்முடைய பகுதியிலேயே உயர்கல்வி பயிலும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினை தீர்க்க நங்கவள்ளி மேட்டூர் தனிக்குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.எவ்வளவு கேட்டாலும் கொடுத்து வருகிறோம்.2011-க்கு முன்பு இந்தப் பகுதி எப்படி இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் இங்கு வந்து எடப்பாடி பழனிசாமி எதுவுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

    அதேபோல உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். இது முதலமைச்சர் தொகுதி என்பதை மறந்து பேசுகிறார்கள். ஸ்டாலின் தொகுதியில் எதுவுமே செய்யவில்லை. அங்கு பாலங்கள் கட்டிக் கொடுத்தது எல்லா வசதியும் செய்துகொடுத்தது அதிமுக ஆட்சியில்தான். அவர் துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தும் ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை.தேர்தல் வந்தால் மட்டுமே கொளத்தூர் தொகுதிக்கு செல்கிறார் ஸ்டாலின். ஆனால் நான் முதலமைச்சரான பின்னரும் 65 முறை எடப்பாடிக்கு வந்து மக்களை சந்தித்துள்ளேன். ஸ்டாலினின் குடும்பமே எடப்பாடிக்கு வந்து சென்றுவிட்டார்கள். எடப்பாடியில் திமுக வெற்றி பெற்ற நிலையே இல்லை.

    45 ஆண்டுகாலம் எடப்பாடி சட்டப்பேரவையில் வெற்றி பெறவே இல்லை. பல முறை ஸ்டாலினின் குடும்பம் வந்தாலும், எடப்பாடி தொகுதி மக்கள் அனைவரும் வேட்பாளராக இருக்கிற காரணத்தால், அவர்களுடைய வாக்கினை அவர்களே போட்டுக் கொள்வார்கள். எனக்கு திறமையில்லை என்கிறார் ஸ்டாலின். திறமை இருக்கிற காரணத்தால் தான் 4 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்துள்ளேன். உங்களை போல மற்றவர்களின் பேச்சை கேட்பதில்லை. சொந்த அறிவை பயன்படுத்துகிறேன். வேறு ஒருவர் எழுதிக் கொடுப்பதைத்தான் ஸ்டாலின் பேசுகிறார். ஆனால் நான் சொந்தமாக பேசுகிறேன். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும். பல்வேறு குற்றச்சாட்டுகளை என்மீது கூறினார். ஒரே மேடையில் இதுகுறித்து விவாதிக்கத் தயாரா எனக் கூறியும் இதுவரை ஸ்டாலின் பதில் பேசவில்லை.

    பொய்யான புகாரினை தொடர்ந்து கூறி வருகிறார். பல முறை சொல்லி விட்டேன். திருநெல்வேலியில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. அது ரத்து செய்யப்பட்டு விட்டது. அங்கு சாலையே அமைக்காத நிலையில் பலநூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். சாலையே அமைக்காமல் எப்படி ஊழல் செய்ய முடியும். இது பச்சைப் பொய். என்மீது அவதூறு பரப்புவதற்காக வேண்டும் என்றே கூறுகிறார். ஊழல் புகாரினை படித்து பார்க்காமல் ஆளுநரிடம் கொடுத்து விட்டார். ஒரு முதலமைச்சர் மீது புகார் கொடுக்கும்போது எந்த அளவிற்கு பார்க்க வேண்டும். வேறு யாரோ கொடுப்பதை படிக்கிறார். காழ்ப்புணர்ச்சியால் புகார் கூற வேண்டும் என்பதற்காக பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டே இருக்கிறார். இந்த தேர்தல் திமுகவிற்கு இறுதித் தேர்தலாக அமையும். உண்மை பேசினால்தான் மக்கள் நம்புவார்கள். எங்கள் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை சொல்கிறோம். ஆனால், திமுக ஆட்சியில் எதுவும் செய்யாததால் அவரால் சொல்வதற்கு எதுவுமில்லை. அதனால் எங்கள் மீது பழிசுமத்துகிறார்.

    மக்களை குழப்பி நிச்சயம் வெற்றி பெற முடியாது. ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து முதலமைச்சராவது எளிதல்ல. அந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முதலமைச்சர் ஆனவுடன் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையில் எழுந்து நின்றவுடன் மோசமாக திமுகவினர் நடந்து கொண்டார்கள். மக்களுக்காக சட்டம் இயற்றும் புனிதமான சட்டசபையில் முதலமைச்சர் டேபிளின் மீது அமைச்சர்களின் டேபிளின் மீது ஏறி நடனம் ஆடுகிறார்கள்.பேப்பரை கிழித்து வீசுகிறார்கள். பின்னர் ஒருவர் எங்கள் எம்.எல்.ஏக்கள் சிலரை அழைத்து சென்றுவிட்டார். அதன் பின்னர் இடைத்தேர்தலில் இறைவன் அருளால், மக்கள் உதவியால் வென்றோம். அதற்கு பின்னரும் ஆட்சிக்கவிழ்ப்பை ஸ்டாலினால் நிறைவேற்ற முடியவில்லை. நான்கு ஆண்டுகாலம் என்னை நிம்மதியாக ஆட்சி நடத்தவிடவில்லை. ஆட்சிக்கவிழ்ப்பு, கட்சியை உடைக்க தொடர்ந்து முயற்சி செய்தார்கள். இப்போது கூட நாடகம் நடத்தி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மா இறந்தபோது, கருணாநிதியிடம் சென்று கோரிக்கை வைத்தபோது மெரினாவில் நல்லடக்கம் செய்ய மறுத்துவிட்டார். கேட்டதற்கு ஜானகி முதலமைச்சராக இறக்கவில்லை எனவே இடம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். இதை கோப்பில் எழுதி வைத்துள்ளார். நீங்கள் எழுதி வைத்ததைத் தானே நாங்களும் செய்ய முடியும். முதலமைச்சர் பதவியில் இல்லாதபோது தான் கருணாநிதி இறந்தார். அவர்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயமா. இதற்கு மக்கள்தான் நீதிபதியாக இருந்து தீர்ப்பு சொல்ல வேண்டும்.

    இதேபோன்று பெருந்தலைவர் காமராஜர் இறந்தபோது, மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய கேட்டபோது இதே பதிலை கருணாநிதி கூறினார். அதே பாணியில் நாங்களும் செய்தோம். முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், ஜானகி அம்மாள் ஆகியோருக்கு இடம் கொடுக்காதவருக்கு நாங்கள் எப்படி கொடுக்க முடியும். இருந்தாலும், உடனடியாக கிண்டியில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் நிலம் வழங்க முன்வந்தோம். முதலமைச்சராக இல்லாமல் இறந்தால் மெரினாவில் நல்லடக்கம் செய்ய இயலாது என்று கருணாநிதி சொன்னதையே நாங்கள் செய்தோம். சட்டத்திற்குள்பட்டு நாங்கள் நடந்து கொண்டோம். இரண்டு தலைவர்களுக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டு பின்னர் வேடம் போடுகிறார்கள்.

    போகிற இடமெல்லாம் 6 அடி நிலம் கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் 43 ஆயிரம் சதுர அடி, 150 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை கொடுக்க முன்வந்தோம். உங்களுடைய நாடகம் இனிமேல் எடுபடாது. நீதியின் அடிப்படையில், சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. நாளைய தினம் பல்வேறு நாடகம் நடிப்பார். பல்வேறு கெட் அப்புகளில் வருவார். அவருக்கு எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என ஸ்டாலின் வெறித்தனமாக உள்ளார். 10 ஆண்டுகாலம் கோரப்பசியில் உள்ளார்.ஆனால் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி தொடரும். உங்களுடைய நடிப்பை நம்ப மாட்டார்கள்.மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலின் நம்பர் 1 ஆக இருக்கிறார். மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும் என ஸ்டாலினுக்கு சிலர் சொல்லித் தருகிறார்கள். மக்களை ஏமாற்ற முடியாது என்றார் அவர்.

    கோகுலக்கண்ணன் - சேலம்
    Published by:Arun
    First published: