தமிழக இளைஞர்கள் எங்கு சென்றாலும் வெற்றிதான், இதற்கு உதாரணம் கிரிக்கெட் வீரர் நடராஜன்: பாஜக தலைவர் தேஜஸ்வி சூர்யா பேச்சு

பாஜக இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா.

திமுக தமிழர் விரோதக் கட்சி. ஏனெனில் இந்துத்துவாவுக்கு எதிரான மோசமான, தீங்கான கொள்கைகளைக் கொண்டது திமுக அதனால் தமிழர்களுக்கும் விரோதக் கட்சிதான் அது. ஒவ்வொரு தமிழரும் பெருமைக்குரிய இந்துக்களே.

 • Share this:
  தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாநில மாநாடு சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது இதில் பேசிய பாஜக இளைஞரணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா, திமுக இந்து விரோதக் கட்சி, தமிழ் வாழ வேண்டுமெனில் இந்துத்துவா வெல்ல வேண்டும் என்று பேசினார்.

  இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர்கள் துரைசாமி, அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பொதுச் செயலாளர்கள் ராகவன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

  விழாவில் பேசிய தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:

  தமிழ்நாடு ஒரு புனித மாநிலம். தமிழகத்தின் வரலாறு மிகவும் தொன்மையானது. தமிழ் மொழியின் தொன்மைக்கு தலை வணங்குகிறேன். தமிழ் மண்ணில் ஆளுமைமிக்க அரசர்கள் பலர் ஆண்டுள்ளனர்.

  தமிழக இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கான சவால் திமுக வடிவில் உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை, தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் கட்சியாக திமுக இல்லை. திமுக தமிழர்கள் விரோதக் கட்சி. ஏன் என்பதற்கு சில விளக்கங்களை நான் கூறுகிறேன். ஜனநாயகத்துக்கு திமுகவினர் ஒரு விளக்கம் வைத்திருக்கின்றனர்.

  அவர்களின் கூற்றுப்படி ஜனநாயகம் என்பது குடும்பத்தால், குடும்பத்துக்காக உருவாக்கப்பட்டது. இங்கே இன்று திரண்டிருக்கும் இளைஞர்கள் யாரும் திமுகவைப் போல் குடும்ப அரசியல் பின்னணி கொண்டவர்கள் இல்லை. தமிழகத்தில் உண்மையான ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். பாஜகவில் மட்டும் தான் சாதாரணத் தொண்டர்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், ஏன் அமைச்சர்களாகக் கூட ஆக முடியும். குடும்பம் உங்கள் கட்சி, கட்சியே எங்களின் குடும்பம் என்ற கொள்கையில் நாங்கள் தொண்டாற்றுகிறோம். இதுவே பாஜகவின் தாரக மந்திரம்.

  திமுக தமிழர் விரோதக் கட்சி. ஏனெனில் இந்துத்துவாவுக்கு எதிரான மோசமான, தீங்கான கொள்கைகளைக் கொண்டது திமுக அதனால் தமிழர்களுக்கும் விரோதக் கட்சிதான் அது. ஒவ்வொரு தமிழரும் பெருமைக்குரிய இந்துக்களே.

  இன்று தமிழக இளைஞர்கள் ஒரு கேள்வியை திமுகவிடம் எழுப்ப வேண்டும். இந்து மோசமானவன், ஹிந்துயிசம் மோசமானது என்று கூறிக்கொண்டே இந்து வாக்குகள் மட்டும் வேண்டுமா என்று கேட்க வேண்டும்.

  திமுக ஆட்சிக்கும் வரும் போதெல்லாம் கோயில்கள் நிலங்களை அபகரிப்பது நடக்கும். திமுக ஆட்சியில் இந்து மத விரோத அறிக்கைகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், இப்போது தேர்தல் நெருங்குவதால் இந்து மதத்தை ஆதரிப்பதுபோல் நடிக்கிறார்கள்.

  பாஜக இந்திக் கட்சி என திமுக பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறது. அப்படி, பாஜக இந்திக் கட்சியாக இருந்திருந்தால் கர்நாடகத்தைச் சேர்ந்த நான், கன்னடம் பேசும் நான் பாஜக இளைஞரணி தேசியத் தலைவராகியிருக்க முடியுமா? இல்லை தமிழகத்தில் பிறந்து தமிழ் பேசும் வானதி ஸ்ரீனிவாசன் தான் பாஜக மகளிரணி தேசியத் தலைவராகியிருக்க முடியுமா? பாஜக பிராந்திய மொழிகளுக்கான கட்சி. பிராந்திய மொழி நன்றாக இருக்க வேண்டுமென்றால் இந்துத்துவம் வலுவாக இருக்க வேண்டும்.

  தமிழக இளைஞர்கள் எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்புவர். அதற்கு சமீபத்திய உதாரணம் உங்கள் ஊரில் இளம் கிரிக்கெட் வீரர் நடராஜன்.

  இவ்வாறு பேசினார் தேஜஸ்வி சூர்யா.
  Published by:Muthukumar
  First published: