"அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்..." தலைமை செயலாளர் விடுத்த எச்சரிக்கை

8 ஆம் தேதி விடுப்பு எடுத்தால், அவர்கள் குறித்த முழு விபரங்களையும் அறிக்கையாக உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும்.

shanmugam
  • News18
  • Last Updated: January 4, 2020, 9:31 AM IST
  • Share this:
மத்திய அரசுக்கு எதிராக நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சண்முகம் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு குறைந்தபட்ச ஊதியம் 23000 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர் நல சட்டத்தில் திருத்தம் செய்ய கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை விற்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தேசிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளன.

சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., போன்ற மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு இருந்தது.


இந்நிலையில், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறி பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் எச்சரித்து உள்ளார்.

மேலும், அரசு ஊழியர்கள் 8 ஆம் தேதி மருத்துவ விடுப்பு மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், மற்ற எந்த விடுப்பும் எடுக்க கூடாது, மீறி எடுத்தால் அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் எச்சரித்து ஆணை பிறப்பித்து உள்ளார்.

8 ஆம் தேதி விடுப்பு எடுத்தால், அவர்கள் குறித்த முழு விபரங்களையும் அறிக்கையாக உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு அந்த ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்