கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமாக சிலர் நபர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் சுற்றிச் சுற்றி வந்தனர். இந்த நபர்கள் தொடர்ந்து 4 நாளாக பின் தொடர்ந்தனர். இவர்களிடம் விசாரித்ததில் கருத்து கணிப்பு எடுப்பதாக கூறினர். அவர்களிடம் விசாரித்த போது திமுக தொடர்பில் உள்ளவர்கள் என்பதும் திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இருந்த புகைப்பட ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்தது. உடனே இவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்” என்றார்.
மேலும், “திமுகவின் ஆதரவார்களாக இருக்கும் இவர்கள்
நான்கு நாள் பின் தொடர காரணம் என்ன? திமுக வேட்பாளரின்,
தூண்டுதல் பேரில் கரூர் தொகுதியில் சதி வேலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கரூரில் தங்கி இருக்கும் இவர்கள் விடுதியில் சரியான முகவரி கொடுக்காமல் முகவரியை மாற்றி கொடுத்துள்ளனர். சர்வே எடுக்க வந்ததாக கூறும் இவர்கள் விடுதி மாறி மாறி தங்க காரணம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், “தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் ஆராத்தி எடுக்கும் போது வைக்கப்பட்ட பொட்டால் எனது நெற்றியில் புண்ணாகி விட்டது. இதன் காரணமாக நேற்று ஒரு பெண் பொட்டு வைக்க வந்த போது வலி தாங்க முடியாமல் தடுத்தேன். இதை தவறாக சித்தரித்து தாழ்த்தப்பட்ட பெண் பொட்டு வைக்கும் போது அமைச்சர் தட்டிவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்து கீழ்தரமான அரசியல் செய்கிறார் செந்தில் பாலாஜி” என்றார்.
மேலும் படிக்க...
அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது...
அதன் பின்னர், “கரூரில் திமுகவினரே ஆள் வைத்து சர்வே எடுத்துக் கொண்டு 24 சதவீதம் திமுக முன்னணியில் உள்ளது என கூறிக் கொள்கின்றனர். தோல்வி பயத்தில் திமுகவினர் உள்ளனர். வெளியூரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து கரூர் தொகுதியில் அராஜகத்தில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் தொகுதியில் திமுக தோல்வி அடைய வாய்ப்பு என தெரிந்து விட்டால் அவர்கள் தேர்தலை நிறுத்த திட்டமிட்டுள்ளனர். எனக்கோ, எனது கட்சி காரர்களுக்கோ எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு காவல்துறையும், தேர்தல் ஆணையமும் தான் பொறுப்பு. திமுகவினர் ஈடுபடும் சதி வேலை, அராஜகம் குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், “தேனி மற்றும் கோவையில் உள்ளவர்களுக்கு கரூர் தொகுதியில் அதிமுக பிரச்சாரத்தில் என்ன வேலை? என தெரியவில்லை என்றார். கரூரில் காவிரி ஆற்றில் 4 இடங்களில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை காரணமாக தாமதம் ஆகிறது. முறைப்படி பணம் செலுத்தி உள்ளுர் தேவைக்கு மணல் எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். அதே போல, அமராவதியில் 4 இடங்களில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து மணல் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதற்கான பணி நடைமுறையில் இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க...
நெருங்கும் வாக்குப்பதிவு எந்தப் பக்கம் அலை வீசுகிறது?
மேலும் சட்டரீதியாக மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலுக்கு பிறகு கரூர் காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கப்படும்” என்றார்.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.